சுதந்திர தினவிழா அணிவகுப்பு ஒத்திகை மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு

திண்டுக்கல்லில் சுதந்திர தினவிழாவையொட்டி போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2020-08-14 05:30 GMT
திண்டுக்கல், 

சுதந்திர தினம் நாளை (சனிக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாவட்ட விளையாட்டு அரங்கில் சுதந்திர தினவிழா நடைபெறுகிறது. இதில் கலெக்டர் விஜயலட்சுமி கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார். இதில் திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

பொதுவாக சுதந்திர தினத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்தல், போலீஸ் அணிவகுப்பு, பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என விளையாட்டு அரங்கே கோலாகலமாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி மாணவர்களின் நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. மேலும் தியாகிகளுக்கு அவர்களின் வீட்டுக்கே சென்று கவுரவிக்கப்பட உள்ளது.

எனினும், போலீசாரின் அணிவகுப்பு மரியாதை சமூக இடைவெளியை கடைபிடித்து நடத்தப்படுகிறது. இதையொட்டி மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர். மேலும் சுதந்திர தினவிழாவுக்கான ஏற்பாடுகள் அங்கு நடைபெற்று வருகின்றன. அதேபோல் சுதந்திர தினத்தையொட்டி அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுப்பதற்கு மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். இதையொட்டி மாவட்டம் முழுவதும் 1,800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் பல்வேறு போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனையும் நடத்தப்படுகிறது. இதுதவிர மாவட்டம் முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான போலீசார் நேற்று மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தினர். இதில் நடைமேடைகள், தண்டவாளங்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

மேலும் செய்திகள்