அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ், மன்னார்குடியை பூர்வீகமாக கொண்டவர்
அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ், மன்னார்குடியை பூர்வீகமாக கொண்டவர் ஆவார்.
மன்னார்குடி,
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இரு கட்சி ஆட்சி முறையை பின்பற்றும் அமெரிக்காவில் ஜனநாயக கட்சி, குடியரசு கட்சி என இரண்டு கட்சிகள் தேர்தலில் போட்டியிடும். அமெரிக்காவின் தற்போதைய அதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு ஜோ பைடனும், துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் என்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த 55 வயதான பெண்மணியும் போட்டியிடுகின்றனர்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுவது இதுதான் முதல் முறையாகும். இது இந்தியர்களுக்கு பெருமை அளிக்கக்கூடிய ஒன்றாகும். அதிலும் கமலா ஹாரிஸ், தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாட்டை அடுத்துள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது கூடுதல் பெருமையாகும்.
கமலா ஹாரிஸ் தாய்வழி தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள். கமலா ஹாரிஸ் தாத்தா கோபாலன், சிவில் சர்வீஸ் பணியில் 1930-ம் ஆண்டு பணியாற்றியவர். அப்போது ஜாம்பியா நாட்டிற்கு கொடிசியாவில் இருந்து வந்த அகதிகளை கணக்கெடுப்பு செய்வதற்காக அப்போதைய ஆங்கிலேய அரசு கோபாலனை அனுப்பியுள்ளது.
பின்னர் கோபாலன், அமெரிக்காவில் குடியேறி உள்ளார். கோபாலனுக்கு பிறந்த இரண்டு பெண் குழந்தைகளில் சியாமளா கோபாலன் என்பவருக்கு மகளாக பிறந்தவர்தான் இன்று அமெரிக்கா துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் துளசேந்திரபுரத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ்.
கமலா ஹாரிசின் குலதெய்வ கோவில் பைங்காநாடு அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தில் அமைந்துள்ள தர்மசாஸ்தா கோவில் என அழைக்கப்படும் அய்யனார் கோவிலாகும். இந்த கோவிலுக்கு கமலா ஹாரிசின் குடும்பத்தினர் நன்கொடை வழங்கியுள்ளனர். அதற்கான கல்வெட்டும் கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது.
அதில் கமலா ஹாரிசின் தாத்தா கோபாலன், கோவிலில் மடப்பள்ளி கட்ட அளித்த நன்கொடை விபரமும், அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு போட்டியிட உள்ள கமலா ஹாரிஸ், கோவில் கட்டுவதற்கு நன்கொடை அளித்த விவரமும் கல்வெட்டில் இடம்பெற்று உள்ளது.
தமிழகத்தின் குக்கிராமத்தில் இருந்து சென்ற சந்ததியின் வாரிசான கமலா ஹாரிஸ், வல்லரசு நாடான அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் அளவிற்கு உயர்ந்திருப்பது துளசேந்திரபுரம் மற்றும் பைங்காநாடு கிராம மக்களுக்கு அளப்பரிய உற்சாகத்தையும், ஆனந்தத்தையும் தந்துள்ளதாக அந்த கிராம பொதுமக்கள் பெருமையுடன் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கூறும்போது, கமலா ஹாரிஸால் எங்களது கிராமங்களுக்கு பெருமை ஏற்பட்டு உள்ளது. இதனால் எங்கள் கிராமத்தினர் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம். தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்று அமெரிக்க துணை அதிபராக இங்கு வந்து சென்றால் தமிழகத்திற்கும், எங்கள் கிராமத்திற்கும் மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் என்றனர்.வரம் இடம்பெற்ற கல்வெட்டு.