மாமல்லபுரம் வெளிநாட்டு மதுக்கடையில் குவிந்த மது பிரியர்கள்
மாமல்லபுரம் வெளிநாட்டு மதுக்கடையில் மது பிரியர்கள் குவிந்தனர்.
மாமல்லபுரம்,
கொரோனா தொற்று காரணமாக சென்னையில் இதுவரை சாதாரண மற்றும் உயர்ரக மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் முழு ஊரடங்கு உள்ள ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் மதுக்கடைகள் திறந்து மது விற்கப்படுகிறது.
குறிப்பாக உயர்ரக மதுபானங்கள் கிடைக்கும் அனைத்து மதுக்கடைகளும் சென்னையில் கடந்த 5 மாதமாக மூடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ஒரே ஒரு வெளிநாட்டு மதுக்கடை மட்டும் கோர்ட்டு உத்தரவுக்கு பிறகு திறக்கப்பட்டு கடந்த 3 மாதாக மது விற்பனை நடந்து வருகிறது.
நேற்று சென்னை மதுபிரியர்கள் ஏராளமானோர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அந்த வெளிநாட்டு மதுக்கடையில் குவிந்தனர். அந்த பகுதியில் 200-க்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுத்து நின்றன.
கார்கள் நிறுத்த இடம் ஒதுக்கீடு
சென்னையில் இருந்து கார்களில் வந்த பலர் உயர்ரக மது வகைகளை பெட்டி, பெட்டியாக வாங்கி சென்றதை காண முடிந்தது. முன்னதாக முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடன் வந்தவர்கள் மட்டுமே வரிசையில் சென்று மது வாங்க அணுமதிக்கப்பட்டனர். மது கடைக்குள் வந்தவர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் கை கழுவும் கிருமி நாசினி வழங்கப்பட்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே அவர்களுக்கு மது பாட்டில்கள் வழங்கப்பட்டன. அதே போல் வரிசையில் வந்தவர்களில் 5, 5 நபர்கள் மட்டுமே கடைக்குள் வர அனுமதிக்கப்பட்டனர். அதற்காக மதுக்கடை நுழைவு வாயிலில் ஒரு ஊழியர் பணியமர்த்தப்பட்டு கூட்டமாக கடைக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் மது பிரியர்களுக்கு அறிவுரை வழங்கி கொண்டிருந்தார்.
மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் தலைமையில் போலீசார் சென்னையில் இருந்து வந்த கார்களால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சர்வீஸ் சாலைகளில் கார்கள் நிறுத்த இடம் ஒதுக்கி கொடுத்தனர். அதேபோல் மது வாங்க செல்பவர்களை சமூக இடைவெளியை பின்பற்றி மது வாங்கி செல்லுமாறு அறிவுறுத்தினர்.