சீர்காழி அருகே மண் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து: செல்போன் கோபுரத்தில் ஏறி 2 வாலிபர்கள் ஆர்ப்பாட்டம்
சீர்காழி அருகே மண் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து செல்போன் கோபுரத்தில் ஏறி 2 வாலிபர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சீர்காழி,
நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா நெப்பத்தூர் கிராமத்தில் தனியார் சவுடு மண் குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரி காரணமாக அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. நேற்றும் போராட்டம் நடந்தது.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து சீர்காழி சேந்தங்குடியில் உள்ள தனியார் செல்போன் கோபுரத்தின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நெப்பத்தூர் பார்த்திபன்(வயது 24), செந்தில்(35) ஆகிய 2 வாலிபர்கள் ஏறி நின்று கையில் தேசிய கொடி மற்றும் பெட்ரோல் பாட்டிலுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு மணி நேரத்தை தாண்டியும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சீர்காழி தாசில்தார் ரமாதேவி, துணை போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரியா மற்றும் போலீசார், வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு செல்போன் கோபுரத்தில் இருந்து இருவரும் கீழே இறங்கி வந்தனர். இதனையடுத்து அவர்களை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.
மண் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.