நாகர்கோவிலில், வங்கி ஊழியர்கள் மேலும் 2 பேருக்கு கொரோனா - தடுப்பு பணிகள் தீவிரம்

நாகர்கோவிலில் வங்கி ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட வங்கியில் நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்தன.

Update: 2020-08-13 07:00 GMT
நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் சாதாரண மக்கள் முதல் அரசு அதிகாரிகள், டாக்டர்கள், நர்சுகள் மற்றும் போலீசார் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நாகர்கோவில் மணிமேடை சந்திப்பில் உள்ள ஒரு தனியார் வங்கியில் 6 ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து அந்த வங்கி மூடப்பட்டது.

மேலும் அங்கு பணியாற்றிய பலருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 6 பேரை தவிர மற்றவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து வங்கி திறக்கப்பட்டது. வங்கியில் பாதிக்கப்பட்ட 6 ஊழியர்களும் பூரண குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பினர்.

இந்த நிலையில் அதே வங்கியில் மேலும் 2 ஊழியர்களுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் 2 பேரும் தொடர்ந்து சளியால் பாதிக்கப்பட்டு இருந்தனர். எனவே அவர்களுக்கு நடந்த பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வங்கியை மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் நேற்று காலை மீண்டும் மூடினர். அங்கு நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. அதாவது கிருமி நாசினி தெளிப்பு, பிளச்சிங் பவுடர் போடுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளை மாநகர் நல அதிகாரி கின்ஷால், சுகாதார ஆய்வாளர் பகவதிபெருமாள் ஆகியோர் பார்வையிட்டனர். முன்னதாக வங்கியில் பணியாற்றிய அதிகாரிகள் உள்பட 40 பேருக்கு ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது. மேலும், நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் குடும்பத்தாருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்