சி.பி.ஐ. அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை: பனியன் கடை உரிமையாளர், மனைவி உள்பட 6 பேர் கைது - 100 பவுன் நகைகள்-ரூ.5 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல்
சினிமா பாணியில் சி.பி.ஐ. அதிகாரிகள் போல் நடித்து டாஸ்மாக் ஊழியர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் திருப்பூரைச் சேர்ந்த பனியன் கடை உரிமையாளர்-மனைவி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 100 பவுன் நகைகள், ரூ.5 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், கார் பறிமுதல் செய்யப்பட்டன.;
திண்டுக்கல்,
திண்டுக்கல் அருகேயுள்ள பொன்னகரம் அண்ணாநகரை சேர்ந்தவர் காளஸ்வரன் (வயது 45). இவர் டாஸ்மாக் ஊழியர் ஆவார். இவருடைய மனைவி அருணாதேவி, அந்த பகுதியில் அங்கன்வாடி ஊழியராக வேலை செய்கிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ந்தேதி காளஸ்வரன் மட்டும் வீட்டில் இருந்தார். அவருடைய மனைவி வேலைக்கு சென்று விட்டார். அப்போது அவருடைய வீட்டின் முன்பு ஒரு கார் வேகமாக வந்து நின்றது. அதில் இருந்து டிப்-டாப்பாக இறங்கிய சிலர் ‘திமுதிமுவென’ காளஸ்வரன் வீட்டுக்குள் நுழைந்தனர். திடீரென வீட்டுக்குள் சிலர் நுழைவதை கண்டு காளஸ்வரன் திடுக்கிட்டு விசாரித்தார். அதற்கு அந்த ஆசாமிகள் தங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் போலீசார் என்று கூறினர். மேலும் வீட்டை சோதனையிட வேண்டும் என்று கூறி வீடு முழுவதும் சோதனையிட்டனர்.
பின்னர் வீட்டில் இருந்த பீரோவை திறந்து காண்பிக்கும்படி அவர்கள் கூறினர். அதற்கு தன்னிடம் பீரோ சாவி இல்லை என்றும், தனது மனைவியிடம் தான் சாவி இருக்கிறது என்றும் காளஸ்வரன் கூறினார். இதையடுத்து அந்த ஆசாமிகள் காரில் அங்கன்வாடிக்கு சென்று அருணாதேவியை அழைத்து வந்தனர். மேலும் சோதனையிடுவதற்கு வசதியாக பீரோவை திறந்து காட்டும்படி அவரை மிரட்டினர்.
சி.பி.ஐ. அதிகாரிகள் என்று கூறியதால் மிரண்டு போன அருணாதேவி பீரோவை திறந்தார். உடனே பீரோவில் இருந்த நகைகள், பணம் மற்றும் நிலத்துக்கான பத்திரங்களை எடுத்து கொண்டு தப்பிவிட்டனர். இதில் சந்தேகம் அடைந்த காளஸ்வரன் திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் ரூ.1 லட்சம் மற்றும் 50 பவுன் நகைகள், நில பத்திரங்களை எடுத்து சென்றதாக கூறியிருந்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் சி.பி.ஐ. அதிகாரிகள் போன்று வந்தவர்கள் மோசடி நபர்கள் என்பது தெரியவந்தது.
எனவே, அதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். எனினும், கொள்ளையர்கள் குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதற்கிடையே திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டாக ரவளிபிரியா ஆகியோர் சமீபத்தில் பொறுப்பேற்றனர். இதையடுத்து நீண்ட நாட்களாக குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் நிலுவையில் இருக்கும் வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்தனர்.
அதன்படி சி.பி.ஐ. அதிகாரிகள் போன்று நடித்து கொள்ளையடித்த வழக்கை விசாரித்து கொள்ளையர்களை பிடிக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவிட்டார். மேலும் திண்டுக்கல் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, பாஸ்டின் தினகரன், ஏட்டுகள் சங்கரநாராயணன், சந்தியாகு, செந்தில்குமார், மருதுபாண்டி, அருளானந்து, பிரபாகரன் ஆகியோரை கொண்ட தனிப்படையை அமைத்தார். இந்த தனிப்படை போலீசார் விசாரணையில் இறங்கினர்.
அப்போது சம்பவத்தன்று அந்த பகுதியில் செயல்பாட்டில் இருந்த செல்போன் எண்கள், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான கார் மற்றும் சந்தேக நபர்களின் உருவத்தை கொண்டு விசாரித்தனர். அதில் திருப்பூரை சேர்ந்த ஒரு கும்பல் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் திருப்பூருக்கு சென்று விசாரித்தனர்.
அதில் காளஸ்வரனின் உறவினரும், திருப்பூர் மாவட்டம் சாமுண்டிபுரத்தை சேர்ந்த பனியன் கடை உரிமையாளருமான கோபி (49) தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் போல் நடித்து நகைகள், பணத்தை கொள்ளையடித்ததை கண்டுபிடித்தனர். மேலும் கொள்ளையடித்த நகைகள், பணத்தை வைத்து கோபி தனது மனைவி, மகன் பெயரில் சொத்துகள் வாங்கியதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கோபி, அவருடைய மனைவி மாலதி (39), மகன் வினோத் (23) மற்றும் கோபியின் கூட்டாளிகளான சண்முகாநகரை சேர்ந்த அய்யப்பராஜன் (34), முத்துகுமார் (27), அவினாசியை சேர்ந்த குகன்செட்டி (48) ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 100 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் மற்றும் ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்துகளுக்கான ஆவணங்கள், கொள்ளைக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
“தானா சேர்ந்த கூட்டம்” எனும் சினிமாவில் கதாநாயகன் சி.பி.ஐ. அதிகாரி, வருமானவரித்துறை அதிகாரி என்று கூறி கொள்ளையடிப்பார். அதே பாணியில் காளஸ்வரன் வீட்டில் கொள்ளை நடந்துள்ளது. எனவே, கைதான 6 பேருக்கும் வேறு ஏதாவது கொள்ளையில் தொடர்பு இருக்கிறதா, என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறி இன்றுடன் (வியாழக்கிழமை) ஓராண்டு நிறைவு பெறுகிறது. அதற்கு முந்தைய நாளான நேற்று கொள்ளையர்களை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.