இத்தாலியில் தற்கொலை செய்துகொண்ட நீலகிரி மருத்துவ மாணவர் உடலை இந்தியா கொண்டு வர பெற்றோர் கோரிக்கை

இத்தாலியில் தற்கொலை செய்துகொண்ட நீலகிரி மருத்துவ மாணவரின் உடலை இந்தியா கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-08-13 05:40 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரியில் வசிப்பவர் சதானந்த். அவரது 2-வது மகன் பிரதீக்ஸ் (வயது 20). இவர் இத்தாலி நாட்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பு படித்து வந்தார். அவர் 3-ம் ஆண்டு படித்து வந்த நிலையில், கொரோனா பாதிப்பு அதிகமானதால் அந்நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் அந்த பல்கலைக்கழகத்தில் படித்த இத்தாலி நாட்டை சேர்ந்த மாணவ-மாணவிகள் தங்களது வீடுகளுக்கு திரும்பினர்.

ஆனால் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பிரதீக்ஸ்சால் இந்தியாவுக்கு திரும்ப முடியவில்லை. பின்னர் அங்கேயே அறை எடுத்து தங்கினார். தொடர்ந்து உத்தரவு தளர்த்தப்பட்டதால் ஆன்லைன் மூலம் மருத்துவ படிப்பு நடத்தப்பட்டு வந்தது. அவரும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் தனிமையில் அதிக நாட்கள் இருந்ததால் பிரதீக்ஸ் மன அழுத்தத்துக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தனது பெற்றோரிடம் தற்கொலை செய்யப்போகிறேன் என்று கூறியதாகவும் தெரிகிறது. இதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர் பிரதீக்ஸ் இத்தாலி நாட்டில் பெர்மோ என்ற இடத்தில் வசித்து வரும் தனது வீட்டிற்கு சென்றார். அங்கிருந்தபடியே மன அழுத்தத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி பிரதீக்ஸ் தனது தந்தையை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அதிக மன அழுத்தத்துக்கு உள்ளானதாகவும், தற்கொலை செய்யப் போவதாகவும் கூறியுள்ளார்.

இதற்கு இத்தாலியில் இருந்து இந்தியா திரும்ப 13-ந் தேதி (அதாவது இன்று) விமானத்தில் முன்பதிவு செய்திருப்பதாகவும், பெங்களூருவுக்கு வந்து நண்பர்களுடன் தங்கி இருந்தால் மனநிலை மாறும், இங்கே கொரோனா பாதிப்பில்லை என்று தந்தை கூறினார். திடீரென செல்போனை துண்டித்த பிரதீக்ஸ் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஊரடங்கு உத்தரவால் தனிமையில் இருந்த நீலகிரி மருத்துவ மாணவர் இத்தாலியில் தற்கொலை செய்துகொண்டது பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பிரதீக்ஸ் உடலை இந்தியா கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து நீலகிரி மாவட்ட பா.ஜனதா தலைவர் மோகன்ராஜ், மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசனிடம் நீலகிரி மருத்துவ மாணவர் தற்கொலை குறித்து கூறினார். அவர் இதுகுறித்து வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளிதரனிடம் தெரிவித்தார். அவர் இத்தாலி நாட்டில் உள்ள இந்திய வெளியுறவு தூதரகத்தை தொடர்பு கொண்டு பேசினார்.

மேலும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதீக்ஸ் உடலை விரைவில் இந்தியா கொண்டுவர இத்தாலியில் உள்ள நமது தூதரகத்தை அறிவுறுத்தி உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். இத்தாலியில் இருந்து இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்