மதுரையில் எரித்த உடல் இலங்கை தாதா அங்கொட லொக்கா உடையதுதானா? தாய்-தந்தையின் ரத்த மாதிரிகள் இந்தியா கொண்டு வரப்படுகிறது - கைதான காதலி உள்பட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

மதுரையில் எரித்த உடல் இலங்கை தாதா அங்கொடா லொக்கா உடையதுதானா? என்பதை உறுதி செய்ய அவருடைய தாய்-தந்தையின் ரத்த மாதிரிகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும் கைதான காதலி உள்பட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது.

Update: 2020-08-12 22:45 GMT
கோவை,

கோவை சேரன்மாநகர் பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தலைமறைவாக தங்கியிருந்த இலங்கையின் நிழல் உலக தாதாவான அங்கொட லொக்கா (வயது 35) கடந்த மாதம் 3-ந் தேதி மாரடைப்பினால் இறந்தார். அவருடைய உடலை அவருடைய காதலி அம்மானி தான்ஷி, மதுரையை சேர்ந்த வக்கீல் சிவகாமி சுந்தரி, ஈரோட்டை சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோர் மதுரைக்கு கொண்டு சென்று எரித்தனர்.

பிரதீப் சிங் என்பவர் பெயரில் போலியான ஆவணங்கள் மூலம் ஆதார் அட்டை தயாரித்து அங்கொட லொக்காவின் உடலை எரித்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இலங்கை தாதா மீது இலங்கையில் பல்வேறு கொலை, கொள்ளை, போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு போன்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கு கோவை பீளமேடு போலீசாரிடமிருந்து சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை தாதாவின் காதலி அம்மானி தான்ஷி, சிவகாமி சுந்தரி மற்றும் தியானேஸ்வரன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் கோவையில் இறந்த இலங்கை தாதா உண்மையிலேயே மாரடைப்பினால் தான் இறந்தாரா? அல்லது விஷம் வைத்துக் கொல்லப்பட்டாரா, இறந்தது அவர் தானா? என்ற சந்தேகம் எழுந்தது. இதைத் தொடர்ந்து உயிரிழந்தது அங்கொட லொக்கா தானா என்பதை உறுதிப்படுத்த மரபணு சோதனை (டி.என்.ஏ.) நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக இலங்கை தாதாவின் தந்தை மதுமாகே லயனல் பெரேரா, தாயார் சந்திரிகா பெரேரா ஆகியோரின் ரத்த மாதிரிகள் இலங்கை தூதகரம் மூலம் சென்னையில் உள்ள தூதரகத்துக்கு அனுப்பி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு இலங்கை போலீசாரால் அங்கொட லொக்கா கைது செய்யப்பட்டார். அப்போது அவருடைய கைரேகைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவையும் ரத்த மாதிரிகளுடன் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிகிறது.

இலங்கையிலிருந்து கொண்டு வரப்படும் அவரது பெற்றோரின் ரத்த மாதரிகளிலிருந்து எடுக்கப்படும் மரபணுவும் இங்கு இறந்த அங்கொட லொக்காவின் ரத்தத்தில் உள்ள மரபணுவும் ஒரே மாதிரியாக இருக்கிறதா? என்று ஆய்வு செய்யப்படும் என்று தெரிகிறது.

இதுகுறித்து கோவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறும்போது, இலங்கை தாதா கோவையில் இறந்தபோது அவருடைய உடல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட உடல் பாகங்கள் மற்றும் ரத்த மாதிரிகள் ஆய்வகத்துக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளன. அவற்றின் முடிவுகள் வந்ததும் கோவையில் இறந்தது இலங்கை தாதாவா? என்பது உறுதி செய்யப்படும் என்றனர்.

அங்கொட லொக்கா கோவையில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் சேரன்மாநகரில் உள்ள பாலாஜி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியை அணுகி தான் சினிமா படங்களில் நடிக்க வேண்டும். அதற்காக தனது மூக்கை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

அந்த அறுவை சிகிச்சை கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி நடந்துள்ளது. அதன்பின்னர் அவர் ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். சினிமாவில் நடிப்பதாக பொய் சொல்லி அங்கொட லொக்கா தனது அடையாளத்தை மாற்ற விரும்பியுள்ளார். இதற்காகத் தான் அவர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளது சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் கைதான அம்மானி தான்ஷி, சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோவை முதன்மை சார்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு நீதிபதி ஸ்ரீகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் 10 நாள் போலீஸ் காவல் அளிக்க வேண்டும் என்று அரசு தரப்பு வக்கீல் ராமானுஜம் வாதாடினார்.

இதற்கு எதிர்தரப்பு வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கைதான 3 பேரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். அதன்பேரில் அம்மானி தான்ஷி, சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஆகிய 3 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்துச்சென்றனர்.

மேலும் செய்திகள்