நிலுவை தொகையை வழங்க கோரி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் பால் நிலுவை தொகையை உடனடியாக வழங்க கோரி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி ஆவின் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மாவட்ட தலைவர் மல்லையன் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
பாப்பாரப்பட்டி அடுத்த ஆலமரத்துப்பட்டி கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க நிர்வாகி தனபால் தலைமை தாங்கினார். சண்முகம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சின்னசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன், முருகன், துரைராஜ் ரத்தினம் உள்பட பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய பால் நிலுவைத்தொகையை முழுமையாக வழங்க வேண்டும். கொரோனா ஊரடங்கு காலத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள வாழ்வாதார பாதிப்பை கருத்தில் கொண்டு 1 லிட்டர் பாலுக்கு ரூ.5 ஊக்கத்தொகை வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் பால் முழுவதையும் ஆவின் மற்றும் பால் கொள்முதல் சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும். உற்பத்தியாளர்கள் கொண்டு செல்லும் பாலை திருப்பி அனுப்ப கூடாது. தரமான கால்நடை தீவனங்களை 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.