திருச்சி-ராமேசுவரம் இடையே 110 கிலோமீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் - பாம்பன் தூக்குப்பாலத்தில் அதிர்வுகளையும் ஆய்வு
திருச்சி-ராமேசுவரம் இடையே 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. மேலும் பாம்பன் தூக்குப்பாலத்தில் பொருத்தி இருந்த சென்சார் கருவிகள் மூலம் அதிர்வுகளும் ஆய்வு செய்யப்பட்டன.
ராமேசுவரம்,
திருச்சி-ராமேசுவரம் இடையே இயக்கப்பட்டு வரும் அனைத்து ரெயில்களும் அதிகபட்சம் 80 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திருச்சி, ராமேசுவரம் இடையே வழித்தடத்தில் இயக்கப்படும் ரெயில்களின் வேகத்தை 100 மற்றும் 110 கிலோ மீட்டர் வேகம் வரை அதிகரிக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதைத்தொடர்ந்து திருச்சியில் இருந்து நேற்று காலை 4 பெட்டிகளுடன் 9.45 மணி அளவில் சோதனை ஓட்டமாக ரெயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரெயிலானது, 110 கிலோ மீட்டர் வேகம் வரை இயக்கப்பட்டது.
திருச்சியில் இருந்து புறப்பட்டு காரைக்குடி, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம் வழியாக பகல் 1.05 மணி அளவில் பாம்பன் கடலில் உள்ள ரெயில்வே பாலம் வந்தது.
ரெயில்வே பாலத்தில் 20 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது. பாலத்தை கடந்து 1.20 மணி அளவில் அந்த ரெயில் ராமேசுவரம் ரெயில் நிலையம் வந்தடைந்தது. இந்த ரெயிலானது 110 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்ட போது தண்டவாளங்களின் உறுதித்தன்மை, அதிவேகமாக ரெயில் செல்லும் போது வழக்கத்தை விட வேறு ஏதேனும் அதிர்வுகள் உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வுசெய்யப்பட்டது.
முன்னதாக 105 ஆண்டுகளை கடந்த பழமையான பாம்பன் தூக்குப்பாலத்தில் ரெயில் வந்த போது, தூக்குப்பாலத்தில் ஏற்கனவே பொருத்தி இருந்த சென்சார் கருவிகள் மூலம் பாலத்தில் அதிக அதிர்வுகள் உள்ளதா மற்றும் அதன் உறுதித்தன்மை குறித்தும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் இந்த வழித்தடத்தில் திருச்சி-மானாமதுரை இடையே முதல் கட்டமாக மின் மயமாக்கும் பணிகள் தொடங்க உள்ளன. இந்த நிலையில் வெற்றிகரமாக இந்த ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.