ஒரே நாளில் 481 பேருக்கு கொரோனா பாதிப்பு வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1000-ஐ தாண்டியது

புதுச்சேரியில் புதிய உச்சமாக ஒரே நாளில் 481 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1000-ஐ தாண்டி உள்ளது.

Update: 2020-08-12 23:25 GMT
புதுச்சேரி,

புதுவையில் நேற்று முன்தினம் 1,123 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 481 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மாநிலத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இதுதான் அதிகபட்ச பாதிப்பு ஆகும். 138 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 5 பேர் இறந்துள்ளனர்.

அதாவது புதுவை வேல்ராம்பட்டு திருமகள் நகரை சேர்ந்த 90 வயது முதியவர், வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த 41 வயது பெண், லாஸ்பேட்டை கென்னடி கார்டனை சேர்ந்த 52 வயது பெண், சேதராப்பட்டை சேர்ந்த 75 வயது மூதாட்டி, ஏனாமில் 75 வயது முதியவர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

வீடுகளில் 1,093 பேர்

புதுவை மாநிலத்தை பொறுத்தவரை இதுவரை 49 ஆயிரத்து 715 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 6 ஆயிரத்து 381 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில் 2 ஆயிரத்து 616 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

3 ஆயிரத்து 669 பேர் சிகிச்சை பெற்று குணமாகி உள்ளனர். ஒட்டுமொத்தமாக 96 பேர் இறந்துள்ளனர். இன்னும் 621 பேருக்கான சோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. ஆயிரத்து 93 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். ஒரே நாளில் புதுவை பிராந்தியத்தில் மட்டும் 413 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுவை மாநிலத்தில் தற்போது சிகிச்சை பெற்று குணமடைபவர்களின் எண்ணிக்கை 57.9 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.5 சதவீதமாகவும் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்