தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் மீன் குஞ்சுகள் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் - மீனவர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் மீன் குஞ்சுகள் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
நாகர்கோவில்,
தேங்காப்பட்டணம் துறைமுக பைபர் படகு மீன்பிடி தொழிலாளர் சங்க தலைவர் சேசாரி, செயலாளர் மரிய செல்வன், பொருளாளர் ஆன்டனி சந்திரன், ஒருங்கிணைப்பாளர் சகாயராஜ், துணை ஒருங்கிணைப்பாளர் மரிய சுதாகர், குமரி மாவட்ட மீனவர் பேரவை தலைவர் ஜோர்தான், துணை தலைவர் கிறிஸ்டோபர் உள்ளிட்டோர் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள வளம் மீன்கள் (குஞ்சுமீன்கள்) மற்றும் சிறுகுஞ்சு கிளாத்தி மீன்களை இனயம் மண்டலத்தை சேர்ந்த சில வியாபாரிகள் இறக்குமதி செய்து அதிக லாபத்திற்கு விற்கிறார்கள். மேலும் கேரளாவில் இருந்து விசைப்படகுகளில் வளம் மீன்களை கொண்டு வந்து கோழித்தீவனத்துக்காக வெளியூர் வியாபாரிகளுக்கு விற்பனை செய்கிறார்கள். இதனால் துறைமுகம் முழுவதும் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.
எனவே குஞ்சு மீன்கள் விற்பனைக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்.
தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் போலி பத்திரப்பதிவு செய்து விசைப்படகு யூனியன் தொடங்க உள்ளனர். அவ்வாறு தொடங்கப்படும் விசைப்படகு யூனியனை தடை செய்ய வேண்டும். தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் மீன் விற்பனை கூடத்தை, வியாபாரிகள் அபகரித்து அலுவலகம் போல் மேஜை, நாற்காலிகளை போட்டு இருக்கிறார்கள். இதனால் மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை விற்பனை கூடத்தில் விற்க முடியாமல் துறைமுக நடைபாதையில் விற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே விற்பனை கூடத்தில் மீன் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் மேலாண்மை கமிட்டியின் பதவிகாலம் முடிந்து 6 மாதங்கள் ஆகிவிட்டது. எனவே புதிய மேலாண்மை கமிட்டியை உடனடியாக அமைக்க வேண்டும். துறைமுகத்தை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் கடல் சீற்றத்தால் உயிரிழந்த 3 மீனவர் குடும்பத்துக்கு அரசு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்குவதோடு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.