ஆம்பூர் அருகே, மனைவி இறந்த துக்கத்தில், கணவன் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை
ஆம்பூர் அருகே மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் துக்கம் தாங்காமல் கணவர் ரெயில்தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்துகொண்டார்.
ஜோலார்பேட்டை,
ஆம்பூர் அடுத்த நாச்சார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது36). இவர் ஆம்பூர் பகுதியில் உள்ள தனியார் காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சசிகலா கடந்த 6-ந் தேதி குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அன்று முதல் ராஜேஷ் மனைவியின் பிரிவை தாங்க முடியாத துயரத்தில் இருந்து உள்ளார். இதனால் வீட்டில் சோகமாகவே இருந்துவந்தார். மனைவி தற்கொலை செய்துகொண்டதால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ராஜேஷ் தானும் தற்கொலை செய்துகொள்ள முடிவுசெய்தார்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு ஆம்பூர் - விண்ணமங்கலம் ரெயில் நிலையங்களுக்கு இடையே கன்னடிகுப்பம் பகுதியில் பெங்களூர் - சென்னை நோக்கி ரெயில் சென்றபோது தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவலறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.