ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் - 55 பேருக்கு கொரோனா
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் நேற்று 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை,
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 682 ஆக இருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் மொத்தம் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 719 ஆக உயர்ந்துள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 33 பேர் சிகிச்சை முடிந்து வீடுதிரும்பி உள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை கொரோனா சிகிச்சை முடிந்து 3 ஆயிரத்து 229 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 78 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 125 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 32 பேர் பூரண குணமடைந்ததையடுத்து நேற்று வீடு திரும்பினர்.
இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேலும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காரைக்குடி பகுதியைச் சேர்ந்த 43வயது ஆண் மற்றும் 75வயது ஆண் ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.