செய்யாறு அருகே, முருகன் கோவில் மலையை டெண்டர் விடுவதை எதிர்த்து பொதுமக்கள் தர்ணா

செய்யாறு அருகே கல் குவாரிக்காக முருகன் கோவில் உள்ள மலையை சுத்தம் செய்ய சென்றவர்கள் தடுக்கப்பட்டனர். இதனை கண்டித்து பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-08-11 22:15 GMT
செய்யாறு, 

செய்யாறு தாலுகா அத்தி கிராமத்தில் அமைந்துள்ள மலையின் உச்சியில் பழமையான முருகன் கோவில் உள்ளது. காலப்போக்கில் இந்த கோவில் பராமரிப்பு இன்றி பாழடைந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த மலையை கல்குவாரிக்கு டெண்டர் விடப்போவதாக தகவல் வெளியானது.

இதனால் கொதிப்படைந்த, அக்கிராம மக்கள் முன்னோர்கள் வழிப்பட்ட முருகன் கோவில் அமைந்துள்ள மலையை டெண்டர் விடக்கூடாது என வலியுறுத்தி கடந்த சில தினங்களுக்கு முன் செய்யாறு உதவிக்கலெக்டர் கே.விமலாவிடம் மனு அளிக்கப்பட்டது. இதனையொட்டி அத்தி கிராமத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஆடிக்கிருத்திகைக்காக நேற்று முன்தினம் கிராம மக்கள் முருகன் கோவிலை சுத்தம் செய்திட முயன்றுள்ளனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தியபோது வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று, மலை அடிவாரத்தில் கிராம மக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த செய்யாறு தாசில்தார் மூர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் மலையினை கல்வாரிக்கு டெண்டர் விடக்கூடாது எனவும், மலையின் உச்சியில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இது குறித்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கவனத்திற்கு எடுத்து சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் மூர்த்தி கூறினளார். இதை ஏற்று கிராம மக்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்