பெரம்பலூரில், டாக்டர்கள் உள்பட மேலும் 35 பேருக்கு கொரோனா - அரியலூரில் ஒரே நாளில் 86 பேர் பாதிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் டாக்டர்கள் உள்பட மேலும் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அரியலூரில் ஒரே நாளில் 86 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரியலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 753 பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் சிகிச்சை பெற்று குணம் அடைந்த 493 பேர் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கும் சில நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனா தொற்றுக்கு இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள 268 பேர் திருச்சி, சேலம், கோயம்புத்தூர், விழுப்புரம், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் உள்ள கொரோனா சிறப்புப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், பெரம்பலூரை சேர்ந்த அரசு சித்த மருத்துவர், கால்நடை மருத்துவர் என 2 டாக்டர்கள் உள்பட 9 பேரும், பெரம்பலூர் புறநகர் அரணாரை, கிராமிய பகுதிகளான மேட்டுப்பாளையம், ஆதனூர், விஜயகோபாலபுரம், ஆதனூர், பூலாம்பாடி, எசனை, வரகுபாடி, திம்மூர், செட்டிக்குளம், ஆலத்தூர், சின்ன வெண்மணி, ஜமீன் ஆத்தூர், பெரிய வெண்மணி ஆகிய பகுதிகளை சேர்ந்த 26 பேர் என மொத்தம் 35 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்கள் 35 பேரும் பெரம்பலூர், திருச்சி, சென்னை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடியிருப்பு பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, சுகாதார துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதன்மூலம், பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 788-ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அரியலூர் நகராட்சி பகுதிகளில் 21 பேருக்கும், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 13 பேருக்கும், திருமானூர், செந்துறை ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தலா 16 பேருக்கும், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒருவருக்கும், ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 8 பேருக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 5 பேருக்கும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 6 பேருக்கும் என மொத்தம் 86 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,431 ஆக உயர்ந்துள்ளது. இதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 1,063 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 355 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 336 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
இந்த நிலையில் ஜெயங்கொண்டத்தில் விருத்தாசலம் சாலை, காவலர்குடியிருப்பு, இந்திரா காலனி, தேவாங்கர்புதுத்தெரு, செங்குந்தபுரம் கிராமம், வெள்ளாளர் தெரு, ஸ்டேட் பேங்க் காலனி, ஜூப்ளி ரோடு ஆகிய பகுதிகளில் என இதுவரை மொத்தம் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அந்தந்த பகுதிகளில் நகராட்சி பணியாளர்கள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டுள்ளது.