திருப்பூரில், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா - போலீஸ் நிலையம் மூடல்
திருப்பூரில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீஸ் நிலையம் மூடப்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் என பலருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
திருப்பூர் குமரன் ரோட்டில் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த போலீஸ் நிலையத்தில் 40 வயதான பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து அந்த போலீஸ் நிலையம் மூடப்பட்டது.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பெண், பல்லடத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு சளி மற்றும் இருமல் இருந்ததை தொடர்ந்து, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கிடையே மகளிர் போலீஸ் நிலையம் அருகே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டது. மருந்துகளும் தெளிக்கப்பட்டது. போலீஸ் நிலையத்தில் பணியாற்றுகிற போலீசாருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.