கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை மின்மயானத்தில் எரிக்க எதிர்ப்பு - அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்

திருப்பூரில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை மின்மயானத்தில் எரிக்க எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள்வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2020-08-11 06:00 GMT
அனுப்பர்பாளையம்,

திருப்பூர் ஆத்துப்பாளையத்தை அடுத்த கோகுலம் காலனியை சேர்ந்த 62 வயது முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் அவர் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அவர் இறந்ததால் அவருடைய உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் ஆத்துப்பாளையத்தில் உள்ள மின்மயானத்தில் நேற்று மாலை 6 மணிக்கு உடலை எரித்தனர்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை மின்மயானத்தில் எரிக்க கூடாது என்றும், கொரோனா பாதித்தவர் உடலை எரிக்கும் போது வெளியேறும் புகையால் நோய் தொற்று பரவும் என்றும் கூறினர்.

இதற்கிடையில் 15 வேலம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடல்கள் இனி இந்த மின்மயானத்தில் எரிக்கப்படமாட்டாது என்று எழுதி கொடுத்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்று கூறி அங்கேயே நின்றனர். பின்னர் போலீசாரின் சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அரசின் வழிகாட்டுதலின்படியே கொரோனா தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், உடலை மின்மயானத்தில் எரிப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்