நிதி நிறுவன மோசடி வழக்கு: சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா விசாரணைக்கு ஆஜராகவில்லை - மீண்டும் சம்மன்

நிதி நிறுவன மோசடி வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகாத சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, மீண்டும் ஆஜராகுமாறு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.;

Update: 2020-08-10 22:00 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் மூலம் பணம் திரட்டி ஏராளமானோரிடம் பல கோடி ரூபாய் அளவில் மோசடி செய்ததாக சென்னை ஆழ்வார்பேட்டை நீதிமணி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி சதுரயுகவள்ளி நகர் அரசு ஆசிரியர் ஆனந்த் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் சேர்க்கப்பட்ட ஸ்டூடியோ கிரீன் உரிமையாளரும், சினிமா தயாரிப்பாளருமான ஞானவேல்ராஜா ஐகோர்ட்டு உத்தரவின்படி கடந்த 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம் போலீசில் நேரில் ஆஜராகி விசாரணைக்கு பதில் அளித்தார். இந்த நிலையில் ஞானவேல்ராஜாவை நேற்று பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் ஆஜராகுமாறு போலீசார் அறிவுறுத்தி இருந்தனர்.

ஆனால் நேற்று ஞானவேல்ராஜா விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை. அதற்கு பதிலாக அவரின் வக்கீல் பாரத் ஆஜரானார்.

இதன்பின்னர் வெளியில் வந்த வக்கீல் பாரத், நேரில் ஆஜராக 6 வார காலம் அவகாசம் கேட்டு ஞானவேல்ராஜா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரையிடம் கேட்டபோது, ஞானவேல்ராஜா வருகிற புதன்கிழமை (நாளை) விசாரணைக்கு மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் கொடுத்து முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் செய்திகள்