ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. படித்த 50,916 மாணவ-மாணவிகள் தேர்ச்சி: மாநில அளவில் 2-வது இடத்தை பிடித்தது

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. படித்த 50,916 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது மாநில அளவில் மாணவர்கள் எண்ணிக்கை தேர்ச்சி விகிதத்தில் 2-வது இடமாகும்.

Update: 2020-08-11 01:46 GMT
வேலூர், 

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 13-ந் தேதி நிறைவடையும் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அதற்கான அட்டவணையும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொற்ற தடுப்பு நடவடிக்கையாக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் மாணவ-மாணவிகள் காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வருகை பதிவேட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. தொடர்ந்து பள்ளி வாரியாக மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் மற்றும் வருகை பதிவேடு பெறப்பட்டன. அவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. மாணவ-மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள் அவர்கள் உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணிற்கு குறுந்தகவலாக (எஸ்.எம்.எஸ்) அனுப்பப்பட்டது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 368 அரசுப்பள்ளிகள் உள்பட 665 பள்ளிகளில் படித்த 25,691 மாணவர்கள், 25,225 மாணவிகள் என்று மொத்தம் 50,916 மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத தயாராக இருந்தனர். அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இது 100 சதவீத தேர்ச்சியாகும். மாநில அளவில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் 2-வது இடத்தை பிடித்தது.

தேர்வு முடிவுகள் பள்ளி அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்தன. மதிப்பெண்ணை தெரிந்து கொள்ள பள்ளிகளுக்கு வந்த மாணவர்கள் அறிவிப்பு பலகையை ஆர்வத்துடன் பார்வையிட்டனர். வருகிற 17-ந் தேதி முதல் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 37 குழந்தை தொழிலாளர் சிறப்பு பயிற்சி மையங்கள் உள்ளன. இங்கு எஸ்.எஸ்.எல்.சி. படித்த 37 மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். பனப்பாக்கத்தை சேர்ந்த மாணவி 356 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார் என்று ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட குழந்தை தொழிலாளர் நலத்துறை திட்ட இயக்குனர் ராஜபாண்டி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்