கர்நாடக அணைகளில் நீர் திறப்பு குறைப்பு: ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து 1 .10 லட்சம் கனஅடியாக குறைந்தது

கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1.10 லட்சம் கனஅடியாக தண்ணீர் வரத்து குறைந்தது.

Update: 2020-08-10 22:30 GMT
பென்னாகரம்,

கர்நாடகம், கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் இந்த 2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு கரைபுரண்டு வந்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1.50 லட்சம் கனஅடி தண்ணீர் வந்தது.

இந்த நிலையில், கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்தும் படிப்படியாக குறையத்தொடங்கியது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1.35 லட்சம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து மேலும் குறைந்து நேற்று மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக குறையத்தொடங்கியது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல் ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளை மூழ்கடித்தபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கல்லில் கரையோரம் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. மேலும் இந்த வீடுகளில் வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் சுமார் 2 அடி உயரத்திற்கு தண்ணீர் செல்வதால் நுழைவுவாயில் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. மேலும் நாகமரை, நெருப்பூர் உள்ளிட்ட காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் பிலிகுண்டுலுவில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். போலீசார், ஊர்க்காவல் படையினர், வருவாய்த்துறையினர் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் காவிரி ஆற்றில் இறங்க வேண்டாம் என்று ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்