நெல்லை- தென்காசி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 43 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 43 ஆயிரத்து 427 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Update: 2020-08-11 01:05 GMT
நெல்லை, 

பள்ளி கல்வியில் இடைநிலை பொதுத்தேர்வு எனப்படும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கொரோனாவால் நடப்பு கல்வி ஆண்டில் ரத்து செய்யப்பட்டது. இதையொட்டி அரசு வழிகாட்டுதலின்படி அவர்களது மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு, நேற்று முடிவு அறிவிக்கப்பட்டது.

இதில் நெல்லை மாவட்டத்தில் 309 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 27 ஆயிரத்து 78 மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு படிப்பை நிறைவு செய்தனர். நெல்லை மாவட்டத்தில் சேரன்மாதேவி, நெல்லை மற்றும் வள்ளியூர் ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. சேரன்மாதேவி கல்வி மாவட்டத்தில் 8,139 பேர், நெல்லை கல்வி மாவட்டத்தில் 11,174 பேர், வள்ளியூர் கல்வி மாவட்டத்தில் 7,765 பேர் என மொத்தம் 27,078 பேர் 10-ம் வகுப்பை படித்து முடித்தனர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக, அதாவது 100 சதவீதம் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு 96.23 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது. கடந்த ஆண்டு மாநில அளவில் 17-வது இடத்தில் இடம் பெற்றிருந்த நெல்லை மாவட்டம் இந்த ஆண்டும் அதே இடத்தில் நீடிக்கிறது. மாநில அளவிலான தரவரிசை நிர்ணயிக்கப்படவில்லை.

தேர்வு எழுதாவிட்டாலும், பிற தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் மற்றும் வருகை பதிவேடு உள்ளிட்டவை அடிப்படையில் மாணவ-மாணவிகள் தேர்ச்சி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி அனைத்து மாணவ-மாணவிகளும் உற்சாகம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் மதிப்பெண் எவ்வாறு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் பெரும்பாலான மாணவ- மாணவிகள் நேற்று தாங்கள் படித்த பள்ளிக்கூடத்துக்கு வந்தனர். அங்கு தங்களது மதிப்பெண்ணை தெரிந்து கொண்டனர்.

இந்த மாணவ-மாணவிகளுக்கு 15-ந்தேதிக்கு பிறகு இடமாற்று சான்று மற்றும் மதிப்பெண் சான்று கிடைக்கும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே அதன் பிறகு பிளஸ்-1 மற்றும் இதர தொழில்நுட்ப படிப்புகளுக்கான கல்லூரிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற வாய்ப்பு உள்ளது. இதே போல் 1-ம் வகுப்பு, 6-ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையும் நடைபெற வாய்ப்பு உள்ளது என்று கூறினார்கள்.

தென்காசி மாவட்டம்

தென்காசி மாவட்டத்தில் 8,188 மாணவர்களும், 8,161 மாணவிகளும் என மொத்தம் 16,349 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இதில் தென்காசி கல்வி மாவட்டத்தில் 4960 மாணவர்களும், 4731 மாணவிகளும், சங்கரன்கோவில் கல்வி மாவட்டத்தில் 3,498 மாணவர்களும், 3430 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்