மளிகை பொருட்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் - பல்பொருள் அங்காடி நிறுவனம் மீது மோசடி புகார்
பல்பொருள் அங்காடி நிறுவனம் மீது மோசடி புகார் அளிக்க மளிகை பொருட்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை,
கொரோனா ஊரடங்கின் காரணமாக புதுக்கோட்டையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மனுக்கள் அளிக்க பொதுமக்கள் பலர் வந்தனர். தஞ்சாவூரை சேர்ந்த ராமதாஸ் தலைமையில் பொதுமக்கள் சிலர் கையில் மளிகைபொருட்களுடன் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் மனு கொடுக்க வந்திருந்தனர். அவர்களை போலீசார் நுழைவுவாயிலில் தடுத்து நிறுத்தி மனுவை பெட்டியில் போட அறிவுறுத்தினர்.
மனு தொடர்பாக ராமதாஸ் நிருபர்களிடம் கூறுகையில், “புதுக்கோட்டையில் உள்ள பல்பொருள் அங்காடி நிறுவனத்தில் பன்முக திட்டத்தில் ரூ.12 ஆயிரம் கொடுத்து உறுப்பினராக சேர்ந்தேன். அப்போது சிறப்பு பரிசாக 5 லிட்டர் சமையல் எண்ணெய் மட்டும் கொடுத்தனர். மேலும் ரூ.12 ஆயிரத்திற்கு 60 மளிகை பொருட்கள் கொடுப்பதாகவும், எனக்கு கீழ் 2 உறுப்பினர்களை சேர்த்துவிட்டால் 5 வாரங்களுக்கு ரூ.500 வீதம் வங்கி கணக்கில் வரவாகும் என்றனர். ஆனால் எனக்கு கூறியபடி மளிகை பொருட்களை நிறுவனத்தினர் தரவில்லை. நான் இத்திட்டத்தில் சேர்த்துவிட்ட சிலருக்கு ரூ.8 ஆயிரம் மதிப்பிலான மளிகை பொருட்களை கொடுத்துள்ளனர். அந்த பொருட்களும் காலாவதியானதாகும். அதனை திருப்பி செலுத்த முயன்ற போது, நிறுவனத்தினர் சரியான பதில் அளிக்கவில்லை. பணம் செலுத்திய எனக்கு பொருட்கள் வழங்காமல் மோசடி செய்துவிட்டனர். அதேபோல இத்திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கும் சரியாக மளிகை பொருட்கள் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டனர். அதனால் மேற்கண்ட நிறுவனத்தினர் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
மேலும் மோசடி தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் அவர் புகார் அளித்தார். நிறுவனம் வழங்கிய காலாவதியான மளிகை பொருட்களுடன் வந்தவர்களால் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல பொது போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் நல மாநில கூட்டமைப்பினர் அளித்த மனுவில் தெரிவித்திருந்தனர்.
விராலிமலை ஒன்றியம் குன்னத்தூர் ஊராட்சி களிமங்கலத்தில் அரசு சார்பில் திருமண மண்டபம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தை அனைவரும் பயன்பெறும் வகையில் கட்ட வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருந்தனர். இதேபோல பொதுமக்கள் பலர் வந்து கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெட்டியில் போட்டனர்.