பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பின்னரும் கொள்ளிடம் அருகே விளை நிலங்களில் மீண்டும் எரிவாயு குழாய் பதிக்கும் பணி - பணிகளை உடனடியாக நிறுத்த விவசாயிகள் கோரிக்கை
டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பின்னரும் கொள்ளிடம் அருகே விளை நிலங்களில் மீண்டும் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம்,
நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தின் கிழக்கு பகுதிகளில் ஓ.என்.ஜி.சி. சார்பில் மாதனம் திட்டம் என்ற பெயரில் 20-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் எடுக்கப்படுகிறது. இங்கு எடுக்கப்படும் திராவக நிலையிலான எரிவாயுவை வர்த்தக நிறுவனங்களுக்கு கொண்டு செல்வதற்காக கொள்ளிடம் பகுதியில் வேட்டங்குடி, எடமணல், திருநகரி ஊராட்சிகளின் வழியாக மேமாத்தூருக்கு 32 கிலோ மீட்டர் தொலைவுக்கு விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கெயில் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது.
இதற்காக 1.5 மீட்டர் ஆழத்திற்கு பூமிக்குள் குழாய்கள் புதைக்கப்பட்டன. இந்த திட்டங்களுக்கு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பல்வேறு இடங்களில் பொதுமக்கள் குழாய் பதிக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடினர். இதையடுத்து பொதுமக்களின் கருத்து கேட்புக்கு பிறகு குழாய் பதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார்.
மேலும் இப்குதியில் விவசாய பணிகளை பாதிக்கும் திட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி வழங்கப்படாது என அறிவித்திருந்தார். விவசாயிகளின் தொடர் போராட்டங்களால் கெயில் எரிவாயு குழாய் புதைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்திலும் புதிய வழித்தடத்தில் சீர்காழி அருகே உள்ள திருநகரியில் இருந்து உச்சிமேடு, வெள்ளக்குளம், கேவரோடை, இருவக்கொல்லை ஆகிய கிராமங்களின் வழியாக பழையபாளையம் முதன்மை எரிவாயு சேமிப்பு மையத்திற்கு எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை மீண்டும் கெயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
மேலும் கொள்ளிடம் அருகே வேட்டங்குடி கிராமத்திலும் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. தகவல் அறிந்ததும் அந்த பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். உடனடியாக பணிகளை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கூழையார் கிராமத்தை சேர்ந்த ஒன்றியக்குழு உறுபினர் அங்குதன் கூறியதாவது:-
கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் பணியால் விவசாயிகளின் விளைநிலங்கள் பாதிக்கப்படும். விவசாயிகளின் வாழ்வாதரங்கள் பாதிக்கப்படுவதால் விவசாயிகள் நிர்க்கதியாக நிற்கும் அவலம் ஏற்படும். பொதுமக்களின் கருத்துக்களை கேட்காமல் இந்த திட்டங்களை செயல்படுத்த கூடாது. இதுபோன்ற பெரும் திட்டங்களை செயல்படுத்தும்போது அந்த பகுதி மக்களின் கருத்துக்களை கேட்பது அவசியம். முதல்-அமைச்சர் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த பகுதிகளில் மீண்டும் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வளர்ச்சி என்ற பெயரில் புதிய புதிய திட்டங்களை கொண்டு வந்து அதற்காக காலம், காலமாக பயன்பாட்டில் உள்ள விவசாய நிலங்களை அழிப்பது அநீதியாகும். கெயில், சாகர்மாலா, ஹைட்ரோகார்பன் போன்ற பேரழிவு திட்டங்களினால் காற்று மாசுபடும். குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். எனவே கெயில் நிறுவனம் குழாய் பதிக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக முதல்-அமைச்சர் அறிவித்தது என்னவாயிற்று? என அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.