முழு ஊரடங்கையொட்டி போக்குவரத்து இன்றி வெறிச்சோடிய சாலைகள்
முழு ஊரடங்கையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் வாகனங்கள் போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.;
திருப்பூர்,
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. இதன் ஒரு பகுதியாக பல்வேறு கட்ட ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் ஏற்கனவே 6-வது கட்ட ஊரடங்கு முடிவடைந்துள்ளது.
தற்போது 7-வது கட்ட ஊரடங்கு வருகிற 31-ந்தேதி வரை அமலில் இருக்கிறது. இந்த ஊரடங்கையொட்டி ஒரு சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பொது போக்குவரத்து முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளது. இதுபோல் இந்த ஊரடங்கின் முக்கிய அறிவிப்பாக இந்த மாதத்தில் வருகிற அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று முழு ஊரடங்கையொட்டி திருப்பூர் மாநகர் பகுதிகளில் உள்ள தாராபுரம் சாலை, பல்லடம் சாலை, அவினாசி சாலை, காங்கேயம் சாலை, பழைய பஸ் நிலைய பாலம், டி.எம்.எப். பாலம் உள்ளிட்ட முக்கிய சாலைகள் மற்றும் பகுதிகள் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. இதுபோல் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. மருந்து கடைகள் மட்டும் ஆங்காங்கே திறந்து இருந்தன.
இதுதவிர மாநகர் பகுதிகளில் புது பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், மாநகராட்சி சிக்னல், புஷ்பா சந்திப்பு, குமரன் சிலை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய தேவையின்றி வெளியே வந்தவர்களுக்கு அபராதமும் விதித்தனர்.
இதுதவிர வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் தென்னம்பாளையம் காய்கறி, மீன் சந்தையில் கூட்டம் அதிகமாக இருக்கும். முழு ஊரடங்கையொட்டி அங்கும் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதுபோல் அனுப்பர்பாளையம், நல்லூர், அவினாசி, உடுமலை, தாராபுரம், தளி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முழு ஊரடங்கையொட்டி முக்கிய சாலைகள் வெறிச்சோடின. கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.