சிறுமுகை அருகே, காந்தையாறு பாலம் மூழ்கியதால் கிராம மக்கள் பரிசலில் பயணம் - உயர்மட்ட பாலம் கட்ட கோரிக்கை

சிறுமுகை அருகே காந்தையாறு பாலம் தண்ணீரில் மூழ்கியதால் கிராம மக்கள் பரிசலில் சென்று வருகிறார்கள். எனவே அங்கு உயர்மட்ட பாலம் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2020-08-10 05:30 GMT
மேட்டுப்பாளையம், 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையின் நீர்த்தேக்க பகுதி கோவை மாவட்டம் சிறுமுகை அருகே வரை உள்ளது. நீர்த்தேக்க பகுதி வழியாக லிங்காபுரத்தில் இருந்து காந்தவயலுக்கு செல்ல சாலை உள்ளது. இந்த சாலையின் குறுக்கே காந்தையாறு குறுக்கிடுவதால், அங்கு பாலம் கட்டப்பட்டு உள்ளது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95 அடியை தாண்டிவிட்டால், காந்தையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் தண்ணீரில் மூழ்கிவிடும். தற்போது அணையின் நீர்மட்டம் 99 அடியை தாண்டிவிட்டது. இதன் காரணமாக காந்தையாறு பாலம் தண்ணீரில் மூழ்கி பாலத்தின் மீது 3 அடி வரை தண்ணீர் நிற்கிறது. இதனால் லிங்காபுரத்தில் இருந்து காந்தவயலுக்கு செல்லும் சாலை மூடப்பட்டு, வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக காந்தவயல், மொக்கைமேடு, உளியூர், ஆளூர், காந்தையூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாலத்தின் மீது 3 அடிக்கும் மேல் தண்ணீர் நிற்பதால் அவர்கள் பாலத்தை கடக்க பரிசல் மூலம் செல்லக்கூடிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் தற்போது அங்கு பரிசல் பயணமும் தொடங்கிவிட்டது.

இது குறித்து அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

லிங்காபுரத்தில் இருந்து காந்தவயலுக்கும், காந்தவயலில் இருந்து லிங்காபுரத்துக்கும் செல்ல பரிசலை மட்டுமே நம்பி உள்ளோம். ஒரு நபருக்கு ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. 100 மீட்டர் தூரம் தண்ணீரில் பரிசலில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தை பரிசலில் ஏற்றிச்செல்கிறோம்.

பாலத்தின் மீது 3 அடிக்கு தண்ணீர் தேங்கி நின்றாலும், ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு ஆற்றை கடக்கும்போது அதில் குறைந்தது 30 அடிக்கும் மேல் ஆழம் இருக்கிறது. இதனால் பயத்துடனே செல்லக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது. இங்கு உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

லிங்காபுரம் சோதனை சாவடி அருகே மாற்றுப்பாதை அமைத்து கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த பாதை வனப்பகுதி வழியாக செல்வதால், வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் பயமாக இருக்கிறது. ஆண்டுதோறும் 6 மாதம் இந்த பாலம் வெளியே தெரிவதும், 6 மாதம் தண்ணீரில் மூழ்கி இருப்பதுமாக இருக்கிறது. எனவே எங்களின் நலன் கருதி, பவானிசாகர் அணை நிரம்பும்போதும், இங்கு கட்டப்படும் பாலம் தண்ணீரில் மூழ்காத அளவுக்கு காந்தையாற்றின் பாலத்தை உயர்த்தி கட்ட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்