கள்ளக்குறிச்சிக்கு இன்று முதல்-அமைச்சர் வருகை: முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் ஆய்வு
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கள்ளக்குறிச்சிக்கு வருகிறார். இதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கிறார். மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்குகிறார்.
இதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி நடைபெற்றது. இதை தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் வந்து ஆய்வு செய்தார். மேலும் கலெக்டர் கிரண்குராலாவிடம் நிகழ்ச்சி நிரல் மற்றும் பாதுகாப்பு குறித்து அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ., பிரபு எம்.எல்.ஏ., மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மகேந்திரன், சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், மாவட்ட இணை இயக்குனர் ரெத்தினமாலா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கெளதமன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் மற்றும் அதிகாரிகள் உடன்இருந்தனர்.