தேனி மாவட்டத்தில், மேலும் 4 பேர் உயிரை பறித்த கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்தது
தேனி மாவட்டத்தில் மேலும் 4 பேரின் உயிரை கொரோனா பறித்தது. பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்தது.;
தேனி,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் தேனி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 7 ஆயிரத்து 640 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 122 பேர் பலியாகி இருந்தனர். இந்தநிலையில், தேனி கூட்டுறவுத்துறை அதிகாரி, போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர், கூடலூர் வடக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர், தேவாரத்தை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாகி, கெங்குவார்பட்டியில் உள்ள தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் 21 பணியாளர்கள், வீரபாண்டி அருகே உப்புக்கோட்டை விலக்கில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் 35 பேர், போடி விலக்கில் உள்ள தனியார் நூற்பாலை தொழிலாளர்கள் 3 பேர், பழனிசெட்டிபட்டியில் உள்ள ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவன தொழிலாளர்கள் 7 பேர் ஆகியோர் உள்பட நேற்று ஒரே நாளில் 362 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்து 2 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல் கொரோனா பாதிப்புடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பொட்டிப்புரம் புதுக்கோட்டையை சேர்ந்த 50 வயது தொழிலாளி, தென்கரையை சேர்ந்த 57 வயது நபர், கைலாசப்பட்டியை சேர்ந்த 50 வயது பெண் ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், தேவாரத்தை சேர்ந்த 50 வயது பெண்ணுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால் கடந்த 6-ந்தேதி போடி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தார். நேற்று முன்தினம் மூச்சுத்திணறல் பாதிப்பு காரணமாக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். நேற்று அவருக்கு பரிசோதனை முடிவு வந்ததில், கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 126 ஆக உயர்ந்தது.