அரியலூர்- பெரம்பலூரில், மருத்துவ பணிகள் துணை இயக்குனர் உள்பட மேலும் 78 பேருக்கு கொரோனா
அரியலூர்- பெரம்பலூரில், மருத்துவ பணிகள் துணை இயக்குனர் உள்பட மேலும் 78 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 46 பேருக்கும், பெரம்பலூரில் 32 பேருக்கும் என மொத்தம் 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 6 பேருக்கும், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேருக்கும், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 14 பேருக்கும், செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 7 பேருக்கும், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 4 பேருக்கும், ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒருவருக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 7 பேருக்கும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 5 பேருக்கும் என மொத்தம் 46 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,291 ஆக உயர்ந்துள்ளது. இதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 995 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 283 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 144 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியது உள்ளது.
இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், சென்னையில் துணை இயக்குனராக (மருத்துவ பணிகள் மற்றும் குடும்பநலம்) பணிபுரியும் 59 வயதுடைய டாக்டர் உள்பட 12 பேருக்கும், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் துபாயில் இருந்து திரும்பி வந்த அரசலூரை சேர்ந்த 27 வயதுடைய ஆண் ஒருவர் உள்பட 12 பேருக்கும், வேப்பூர், ஆலத்தூர் ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தலா 4 பேருக்கும் என மொத்தம் 32 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 718 ஆக உயர்ந்துள்ளது. இதில் தற்போது 225 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 73 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.