இளம்பிள்ளை அருகே பயங்கரம்: பட்டதாரி வாலிபர் காரில் கடத்திக்கொலை - உறவினர் உள்பட 3 பேர் கைது-திடுக்கிடும் தகவல்கள்
இளம்பிள்ளை அருகே பட்டதாரி வாலிபர் காரில் கடத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய உறவினர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
இளம்பிள்ளை,
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள நல்லனம்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் செல்வம். விவசாயி. இவருடைய மகன் பூபாலன் (வயது 24). பட்டதாரி. இவர் குரூப்-1 தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்தார்.
கடந்த 7-ந்தேதி இரவு பூபாலன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன அவருடைய உறவினர்கள் பூபாலனை அக்கம்பக்கத்தில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மகுடஞ்சாவடி போலீசில் அவரது தந்தை செல்வம் புகார் செய்தார். இதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பூபாலனை தேடி வந்தனர்.
இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த பூபாலனின் பெரியப்பா கந்தசாமியின் மகன் ஏழுமலையை (29) பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஏழுமலை மற்றும் அவருடைய உறவினர் உள்பட 3 பேர் சேர்ந்து பூபாலனை காரில் கடத்திச்சென்று கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
ஏழுமலை குடும்பத்துக்கும், பூபாலன் குடும்பத்துக்கும் நிலப்பிரச்சினை இருந்து வந்தது. பூபாலனின் தந்தை செல்வம் புதிதாக வீடு கட்டி வருகிறார். ஏழுமலை வீட்டுக்கும், செல்வம் வீட்டுக்கும் இடையே வழித்தடம் உள்ளது. அந்த வழியாக பொருட்களை செல்வம் கொண்டு சென்றார். இதை ஏழுமலை குடும்பத்தினர் தடுத்தனர். இதனால் இருதரப்பினர் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.
இந்தநிலையில் கடந்த 7-ந்தேதி இரவு பூபாலன் வீட்டில் இருந்து வெளியே சென்றதை அறிந்தனர். பின்னர் ஏழுமலை, அவருடைய உறவினர் பழனியின் மகன் ஜெகன் (21), மேட்டுக்காடு பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் சத்தியமூர்த்தி (26) ஆகிய 3 பேரும் சேர்ந்து பூபாலனை பிடித்தனர். பின்னர் அவருடைய வாய், முகம், தலை உள்ளிட்ட பகுதிகளில் டேப் போட்டு ஒட்டினர். கை, கால்களையும் கட்டினர். இதனால் பூபாலனால் பேசவோ, மூச்சுவிடவோ முடியாமல் திணறி உள்ளார்.
அங்கிருந்து ஒரு மோட்டார்சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சிறிதுதூரம் சென்றுள்ளனர். அந்த பகுதியில் ஒரு இடத்தில் ஏற்கனவே ஒரு காரை தயார் நிலையில் நிறுத்தி இருந்தனர். அந்த காரில் பூபாலனை ஏற்றிக்கொண்டு சித்தர்கோவில் அருகே சென்றதும் பூபாலனுடன் காரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி சென்று விட்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் மேற்கண்ட திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சசிகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் பெரியசாமி, பூபதி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கு நிறுத்தப்பட்டு இருந்த காரில் இருந்த பூபாலன் இறந்து கிடந்தார். டேப் போட்டு ஒட்டியதில் அவர் மூச்சுத்திணறி இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து அவருடைய உடலை போலீசார் மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பட்டதாரி வாலிபரை காரில் கடத்திக்கொலை செய்ததாக ஏழுமலை, ஜெகன், சத்தியமூர்த்தி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 3 பேரும் தறித்தொழிலாளர்கள் ஆவார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.