முழு ஊரடங்கு: திருவாரூர் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு - மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின

முழு ஊரடங்கையொட்டி நேற்று திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின.

Update: 2020-08-09 22:15 GMT
முழு ஊரடங்கு: திருவாரூர் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு - மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின
திருவாரூர், 

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையொட்டி வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. கடந்த மாதம் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வில்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்து இருந்தார். அதன் தொடர்ச்சியாக இந்த மாதமும் அனைத்து ஞாயிற்றுக்கி்ழமைகளும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று 2-வது ஞாயிற்றுக்கிழமை திருவாரூர் மாவட்டத்தி்ல் தளர்வில்லாத முழு ஊரங்கு கடைபிடிக்கப்பட்டது. திருவாரூரில் அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் மக்கள் நடமாட்டமின்றி அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. எந்த நேரத்திலும் போக்குவரத்து அதிகமாக உள்ள கடைவீதி, நகை கடை சந்்து, பனகல் சாலை, நேதாஜி சாலை வாகன போக்குவரத்து இன்றி காணப்பட்டது.

இதேபோல் தேரோடும் 4 வீதிகள், கமலாலய குளத்தின் கரைகள் பகுதியில் அதிகாலையில் நடைபயிற்சி செய்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். ஆனால் ஊரடங்கினால் யாரும் நடைபயிற்சி மேற்கொள்ளவில்லை. ஊரடங்கையொட்டி லாரி, வேன், ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் முற்றிலும் இயக்கப்படவில்லை. மாவட்ட போலீஸ் சூப்பி்ரண்டு துரை உத்தரவின்படி மாவட்டம் முழுதும் போலீசார் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். முழு ஊரடங்கையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டதால் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

மேலும் செய்திகள்