சேவூர் அருகே, ஒரே சேலையில் தூக்குப்போட்டு தாய்-மகன் தற்கொலை
சேவூர் அருகே உள்ள ஆலத்தூரில் நேற்று தாய், மகன் இருவரும் ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சேவூர்,
திருப்பூர் மாவட்டம், அவினாசியை அடுத்த சேவூர் அருகே உள்ள ஆலத்தூர் நல்லகாளிபாளையத்தை சேர்ந்தவர் அருக்காணி (வயது 75). இவரது கணவர் சுப்பிரமணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு கருப்பசாமி, மூர்த்தி என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகன் கருப்பசாமி திருமணமாகி புளியம்பட்டி நால்ரோடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 2-வது மகன் மூர்த்திக்கு (45) திருமணம் ஆகவில்லை. இவர் தாயார் அருக்காணியுடன் ஓட்டு வீட்டில் வசித்தபடி கூலி வேலைக்கு சென்று வந்தார்.
இதற்கிடையில் அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் அருக்காணியும், திருமணமாகாத ஏக்கத்தில் அவரது மகன் மூர்த்தியும் இருந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை 8 மணி ஆகியும் அவர்கள் வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அருக்காணியின் மூத்த மகன் கருப்பசாமிக்கு தகவல் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து கருப்பசாமி விரைந்து வந்து கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் விட்டத்தில் அருக்காணியும், மூர்த்தியும் ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து உடனடியாக சேவூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சேவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள், சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் அருக்காணி, மூர்த்தி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயும்-மகனும் வாழ்க்கையில் வெறுப்படைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.