தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,
அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் தர்மபுரி மாவட்ட பிரிவு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஜீவா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நாகராஜன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொ.மு.ச. மாவட்ட தலைவர் அன்புமணி, மாவட்ட செயலாளர் சண்முகராஜா, ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் மோகன், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், எச்.எம்.எஸ். தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், ஏ.ஐ.சி.சி.டி.யு. மாவட்ட செயலாளர் முருகன் உள்ளிட்ட கூட்டமைப்பு நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி பாதுகாப்புத்துறை சார்ந்த தொழிற்சாலைகள், ரெயில்வே, நிலக்கரி சுரங்கங்கள், காப்பீடு, வங்கி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனியார் மய நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு அறிவிக்கை தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப்புகளாக குறுக்குதல், வேலைநேரத்தை 12 மணி நேரமாக அதிகரித்தல் ஆகிய நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 40 கோடி தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 6 மாதங்களுக்கு தலா ரூ.7500 நிவாரணம் வழங்க வேண்டும். நலவாரியங்களில் பதிவு செய்துள்ள கட்டுமானம், ஆட்டோ தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி நிவாரணம் மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பபட்டன. இதில் தொழிற்சங்க கூட்டமைப்பை சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.