திண்டுக்கல் அருகே, நள்ளிரவில் வீடு புகுந்து பெண் வெட்டிக்கொலை
திண்டுக்கல் அருகே, நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
குள்ளனம்பட்டி,
திண்டுக்கல் ஆர்.எம். காலனியை சேர்ந்தவர் சுப்பாராஜ். அவருடைய மனைவி சாந்தா (வயது 56). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தந்தையும், மகனும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். சுப்பாராஜூக்கு சிறுமலை அருகே தென்மலை தும்பிசோலை பகுதியில் சொந்தமாக தோட்டம் உள்ளது. இதை பராமரிப்பதற்காக அங்குள்ள தோட்டத்து வீட்டில் சாந்தா வசித்து வருகிறார்.
மேலும் திண்டுக்கல்லை சேர்ந்த காமாட்சியம்மாள் (55) என்பவரை சாந்தா வீட்டு வேலைக்கு வைத்திருந்தார். அந்த வீட்டில் இவர்கள் இருவர் மட்டுமே வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காமாட்சியம்மாள், முதியோர் உதவித்தொகை வாங்குவதற்காக திண்டுக்கல்லுக்கு வந்துவிட்டார்.
இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த ராஜலட்சுமி (52) என்பவரை தன்னுடைய வீட்டுக்கு சாந்தா வரவழைத்து உதவிக்காக வைத்துக்கொண்டார். நேற்று முன்தினம் இரவு 2 பேரும் வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் அந்த வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்தனர். அவர்கள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கையில் வைத்திருந்தனர்.
பின்னர் தூங்கிக்கொண்டிருந்த ராஜலட்சுமியை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சரமாரியாக வெட்டினர். வலியால் ராஜலட்சுமி அலறிய சத்தம் கேட்டு சாந்தா எழுந்தார். மர்ம நபர்கள், ராஜலட்சுமியை வெட்டிக்கொண்டிருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து அவர்களை தடுக்க முயன்றார்.
அப்போது சாந்தாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர் அலறி கூச்சல் போட்டார். இவர்களின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். இதற்கிடையே அந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள், அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். இதற்கிடையே அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த ராஜலட்சுமி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சாந்தாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக, திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் ராஜலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோத் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்த வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர். இதற்கிடையே கொலை நடந்த வீட்டின் அருகில் கிடந்த அரிவாள் மற்றும் கத்தி ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தப்பியோடிய மர்ம நபர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சிறுமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.