10-ந் தேதி மாணவர் சேர்க்கை குறித்து முதல்-அமைச்சர் அறிவிப்பார் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
10-ந் தேதி மாணவர் சேர்க்கை குறித்து முதல்-அமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
நம்பியூர்,
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பூசாரியூரில் விவசாயிகளுக்கு கறவை மாடு வாங்க கடன் உதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன் தலைமை தாங்கினார். மாநில வர்த்தக அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
விழாவில் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு, 82 விவசாயிகளுக்கு ரூ.70 லட்சம் மதிப்பில் கறவை மாடு மற்றும் கன்றுக்குட்டி வளர்ப்புக்காக கடன் உதவி வழங்கினார். இதில் குருமந்தூர் குள்ளம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நிர்வாகிகள், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவின் முடிவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நவம்பர் மாதம் பள்ளிக்கூடம் திறக்கப்படும் என்பது தவறான தகவல். அதுகுறித்து பள்ளிக்கல்வி துறை சார்பில் எந்த தகவலும் வரவில்லை. கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்த பின்பு மக்கள், பெற்றோர்கள் மனநிலை அறிந்து முதல்-அமைச்சர் தான் முடிவு எடுப்பார். நீட் தேர்வை பொறுத்தவரை தமிழகத்துக்கு முழுமையான விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்பது தான் அரசின் கொள்கையாகும்.
ஆன்லைன் வகுப்பு கண்துடைப்பு என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆன்லைன் வகுப்புக்கு கட்டணம் வசூலிப்பதாகவும், எனவே அதற்கு தடை கேட்டும் பெற்றோர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதன் மீதான தீர்ப்பு 19-ந் தேதி அளிக்கப்படுகிறது. அதன்பின்னர் ஆன்லைன் வகுப்பு நடத்துவதா? இல்லையா? என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
மேலும் பெற்றோர்களிடம் இருந்து முதல் கட்டமாக 40 சதவீத கல்வி கட்டணமும், 2-வது கட்டமாக 35 சதவீதமும் வசூலிக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து பெற்றோர்கள் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து கல்வி கட்டணம் வசூலிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். மாணவர் சேர்க்கை குறித்து அறிவிப்பை 10-ந் தேதி முதல்-அமைச்சர் அறிவிப்பார். தற்காலிகமாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.