சங்ககிரி அருகே சரக்கு வேன்-லாரி மோதல்; 3 தொழிலாளர்கள் பலி
சங்ககிரி அருகே சரக்கு வேன்- லாரி மோதிய விபத்தில் 3 தொழிலாளர்கள் பலியானார்கள்.
சங்ககிரி,
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள செலவடை பகுதியை சேர்ந்தவர் சின்னு என்கிற கிருஷ்ணசாமி (வயது 61). அதே பகுதியை சேர்ந்தவர்கள் செல்வம் (56), ராஜசேகர் (26), பூவரசன் (19), ராமன் (27), சண்முகம் (56), ராஜா (49). இவர்கள் 7 பேரும் கட்டிட தொழிலாளர்கள் ஆவர். கோவையில் சித்திரைச்சாவடியில் தடுப்பணை கட்டும் பணிக்காக இவர்கள் சென்றிருந்தனர். அங்கு தங்கி இருந்து வேலை பார்த்து வந்தனர்.
தற்போது கோவை மாவட்டத்தில் மழை பெய்து வருவதால், அங்கு தடுப்பணை கட்டும் பணி தடைபட்டுள்ளது. இதனால் அவர்களால் பணியில் ஈடுபட முடியவில்லை. இதைத்தொடர்ந்து அவர்கள் 7 பேரும் நேற்று முன்தினம் இரவு சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தனர். இதன்படி அவர்கள் நீலாங்கரை புறவழிச்சாலைக்கு வந்தனர். அங்கு பஸ் போக்குவரத்து இல்லாததால், அந்த வழியாக சேலம் நோக்கி வந்த ஒரு சரக்கு வேனில் ஏறி, வந்து கொண்டிருந்தனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம் பகுதியில் நள்ளிரவு 1.15 மணிக்கு, முன்னால் சென்ற லாரி மீது சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதியது. இதில் வேனின் முன்புறம் சேதம் அடைந்ததில் சின்னு என்கிற கிருஷ்ணசாமி, செல்வம் ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மேலும் சேலம் கருப்பூரை சேர்ந்த சரக்கு வேன் டிரைவர் சுரேஷ், ராஜசேகர், ராஜா, பூவரசன், சண்முகம், ராமன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜசேகர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.