புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை நெருங்கியது: சாவு எண்ணிக்கை 36 ஆக உயர்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை நெருங்கியது. சாவு எண்ணிக்கை 36 ஆக உயர்ந்தது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று வெளியான பட்டியலில் 173 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 928 ஆக அதிகரித்து 3 ஆயிரத்தை நெருங்கியது. இந்தநிலையில் தொற்றால் பாதிக்கப்பட்ட 54 பேர் பூரண குணமடைந்ததால் அவர்கள் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், புதுக்கோட்டையை சேர்ந்த 50 வயது ஆண், 68 வயது முதியவர், 70 வயது முதியவர் ஆகிய 3 பேர் பலியாகினர். இதனால் சாவு எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.
அன்னவாசலில் வருவாய் ஆய்வாளரான புதுக்கோட்டையை சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அன்னவாசல் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மூடப்பட்டது. முன்னதாக அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
அரிமளம் பேரூராட்சியில் பணியாற்றி வந்த 43 வயது பெண்ணுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய்க்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆதனக்கோட்டை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் 6 போலீசாருக்கு நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டது.