பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்க முடியாத இடங்களில் நடமாடும் ரேஷன் கடைகள் திறக்கப்படும்: அமைச்சர் காமராஜ் பேட்டி

பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்க முடியாத இடங்களில் நடமாடும் ரேஷன் கடைகள் திறக்கப்படும் என்று, அமைச்சர் காமராஜ் கூறினார்.

Update: 2020-08-07 23:17 GMT
கோட்டூர், 

கோட்டூர் கிராமத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட கூடுதல் கலெக்டர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமை தாங்கினார். கோட்டாச்சியர் புண்ணியகோடி நோய் தடுப்பு மருத்துவதுறை துணை இயக்குனர் விஜயகுமார் மன்னார்குடி தாசில்தார் கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலைமுருகேசன் வரவேற்று பேசினார். அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய அளவில் தமிழகத்தில் தான் அதிகமானோருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இ-பாஸ் வழங்குவதில் உள்ள நடைமுறை பிரச்சினைகளை எளிமையாக்க ஏற்கனவே அமைக்கப்பட்ட குழுவுடன் கூடுதலாக மேலும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இ-பாஸ் பெரும் நடைமுறை எளிமையாக்கபடும். பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்க முடியாத இடங்களில் நடமாடும் ரேஷன் கடைகள் திறக்கப்படும். மும்மொழி கொள்கை நாடு முழுவதும் இருந்த போதும் அறிஞர் அண்ணா எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழிகளை பின்பற்றி தமிழகத்தில் இரு மொழி கொள்கை பின்பற்றப்படும். இவ்வாறு அமைச்சர் காமராஜ் கூறினார்.

இதேபோல் முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர் தலைமை தாங்கினார். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை துணை இயக்குனர் விஜயகுமார் வரவேற்றார். முகாமை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு முக கவசம், கபசுரகுடிநீர் வழங்கினார்.

இதில் மன்னார்குடி ஆர்.டி.ஓ. புண்ணியகோட்டி, திருத்துறைப்பூண்டி தாசில்தார் ஜெகதீசன், பேரூராட்சி செயல் அலுவலர் தேவராஜ், மங்கள் கூட்டுறவு வங்கி தலைவர் மங்கள் அன்பழகன், ஒன்றியக்குழு தலைவர் கனியமுதா, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் நடராஜன், முன்னாள் பேரூராட்சி தலைவர் அருணாச்சலம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், வெற்றியழகன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்