தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பெண்கள் உள்பட 3 பேர் பலி
தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியானார்கள். அமைச்சரின் பாதுகாவலர் உள்பட டெல்டா மாவட்டங்களில் 339 பேருக்கு தொற்று உறுதியானது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா தொற்றால் 3 ஆயிரத்து 484 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று ஒரு நாளில் தஞ்சை தாலுகாவில் 55 பேரும், கும்பகோணம் தாலுகாவில் 50 பேரும், பட்டுக்கோட்டை, திருவையாறு தாலுகாக்களில் தலா 35 பேரும், பாபநாசம் தாலுகாவில் 13 பேரும், ஒரத்தநாடு தாலுகாவில் 12 பேரும், திருவிடைமருதூர் தாலுகாவில் 11 பேரும் என 217 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் நர்சு, வங்கி மேலாளர்கள், அரசு பஸ் டிரைவர் ஆகியோர் அடங்குவர்.
இதன்மூலம் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 701 ஆக உயர்ந்துள்ளது. மேலும் குணம் அடைந்த 67 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுவரை 2 ஆயிரத்து 634 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,028 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த 59 வயது ஆண், பட்டுக்கோட்டை செரிபாளையத்தை சேர்ந்த 64 வயது பெண், அய்யம்பேட்டை திருநகரை சேர்ந்த 73 வயது பெண் ஆகியோர் உயிரிழந்தனர். இதன்மூலம் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் பாதுகாவலராக பணியாற்றி வரும் 55 வயதுடைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு காய்ச்சல் இருந்தது. இதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. அதில் அவருக்கு தொற்று இருப்பது தெரிய வந்தது.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே 1,875 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் ஒருவர், நன்னிலம் பகுதியை சேர்ந்த 3 பேர், வலங்கைமான் பகுதியை சேர்ந்த 7 பேர், முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த 2 பேர், திருவாரூர் பகுதியை சேர்ந்த 2 பேர், கொரடாச்சேரி பகுதியை சேர்ந்த ஒருவர்் உள்பட 44 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் திருவாரூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,919 ஆக உயர்ந்துள்ளது. மேலும் குணம் அடைந்த 27 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது 199 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகை
நாகை மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா தொற்றால் 921 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று ஒரே நாளில் 78 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 999 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 11 பேர் பலியாகி உள்ளநிலையில் 550 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர். 438 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களில் அமைச்சரின் பாதுகாவலர் உள்பட 339 பேர் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
கலெக்டரின் உதவியாளருக்கு கொரோனா
நாகை கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கலெக்டரின் நேர்முக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் முக்கியத்துறை அதிகாரிகள், ஊழியர்களை தவிர வேறு யாரும் கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
மேலும் கலெக்டர் அறை, உதவியாளர் அறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலகங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பல்வேறு தேவைகளுக்காக கலெக்டர் அலுவலகம் வந்த பொதுமக்களை போலீசார் உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை(ஞாயிற்றுக்கிழமை) வரை கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.