விடுபட்ட விவசாயிகளும் பயிர்க் காப்பீடு திட்டத்தில் சேர நடவடிக்கை: கலெக்டர் பேட்டி

விடுபட்ட விவசாயிகளும் பயிர்க் காப்பீடு திட்டத்தில் சேர நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்தார்.

Update: 2020-08-07 22:48 GMT
தஞ்சாவூர், 

தஞ்சை கரந்தையில் உள்ள ஏ.எஸ்.அன்பழகன் நகரில் 1 ஏக்கர் பரப்பில் அடர்ந்த காடுகள் வளர்க்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி காவேரி ரோட்டரி சங்கத்தின் உதவியுடன் 65 வகையான 9 ஆயிரம் மரக்கன்றுகள் நடும்பணி நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் தலைமை தாங்கினார்.

இந்த பணியை கலெக்டர் கோவிந்தராவ் தொடங்கி வைத்து மரக்கன்றுகளை நட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்களிடம் பணம் வாங்குவதாக வரும் புகார்கள் தொடர்பாக சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்து வருகிறோம். லஞ்ச ஒழிப்பு போலீசார் மூலமாகவும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. புகார் உண்மை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா பரிசோதனை முழுக்க, முழுக்க இலவசமாக செய்யப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 90 ஆயிரம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைக்கு யாராவது பணம் கேட்பதாக புகார் வந்தாலோ அல்லது பணம் தர வேண்டும் என நிர்பந்தம் செய்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ பணியாளர்கள் சேவை மனப்பாண்மையுடன் பணி புரிந்து வருகின்றனர். அவர்களை பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும். ஓரிரு சதவீதம் தவறு நடக்க வாய்ப்பு இருக்கிறது. அதை தடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசார், வருவாய்த்துறை, சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தவறு செய்பவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களை பார்த்து பயப்பட தேவையில்லை. அவர்கள் நல்ல முறையில் விரைவில் குணம் அடைய வேண்டும் என்றால் நாம் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அவர்களை பிரித்து பார்த்தால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி, குணம் அடைவதற்கு தாமதம் ஆகும்.

54 ஆயிரத்து 300 விவசாயிகளை பயிர்க் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் 43 ஆயிரத்து 225 எக்டேரில் குறுவை நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. உரிய காலத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்ட காரணத்தினாலும், குடிமராமத்து பணி சிறப்பாக செய்யப்பட்டதாலும் 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 54 ஆயிரம் எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பயிர்க் காப்பீடு திட்டத்தில் சேர முடியாமல் விடுபட்டுள்ள விவசாயிகளிடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் விண்ணப்பங்களை பெற்று பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பிற நோய்களால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு கொரோனாவை காரணம் காட்டி சிகிச்சை அளிக்க மறுத்தால் மருத்துவமனைகளின் லைசென்சு ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி செயற்பொறியாளர் ராஜகுமாரன், நகர்நல அலுவலர் நமச்சிவாயம், கண்காணிப்பாளர் கிளமெண்ட் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சை அருளானந்த நகர் 2-ம் தெரு மற்றும் எல்.ஐ.சி. காலனி ஆகிய பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தங்களது வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டவர்களிடம் கலெக்டர் கோவிந்தராவ் செல்போன் மூலம் பேசி நலம் விசாரித்தார். பின்னர் அவர், ரெட்டிப்பாளையத்தில் உள்ள நவீன தகன மேடையை பார்வையிட்டார்.

குப்பை தரம் பிரிக்கும் மையத்திற்கு எதிர்ப்பு

கரந்தை ஏ.எஸ். அன்பழகன் நகரில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பெண்கள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் கோவிந்தராவை சந்தித்து மனு அளித்தனர். அவர்களிடம் கலெக்டர், குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு, மக்காத குப்பைகள் அப்புறப்படுத்தப்படும். மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும். மக்கள் ஒத்துழைப்புடன் இந்த மையம் செயல்பட உள்ளது. குப்பைகள் மலைபோல் தேக்கி வைக்கப்படுமோ? என அச்சப்பட வேண்டாம். நவீன தொழில்நுட்பம் மூலம் உடனுக்குடன் குப்பைகள் தரம் பிரித்து அப்புறப்படுத்தப்படுவதால் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.


மேலும் செய்திகள்