புதிதாக 244 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு 5 ஆயிரத்தை நெருங்கியது சாவு எண்ணிக்கை 75 ஆக உயர்வு

புதுவையில் நேற்று புதிதாக 244 பேர் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதால் சாவு எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.;

Update: 2020-08-07 21:16 GMT
புதுச்சேரி,

புதுவையில் நேற்று முன்தினம் 940 பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 244 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் 567 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 77பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஒட்டு மொத்தமாக 45ஆயிரத்து 98 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதில் 226 பேர்களது பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி 4,862 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1,873 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,914 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

5 பேர் சாவு

இந்தநிலையில் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 5பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதில் 4பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் ஒருவர் ஜிப்மரிலும் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். பழைய பஸ்நிலையம் அருகே உள்ள வ.உ.சி. தெருவை சேர்ந்த 65 வயது மூதாட்டிக்கு ஏற்கனவே நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருந்தது. கொரோனா உறுதி செய்யப்பட்டதால் கடந்த 21-ந் தேதி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

ரெட்டியார்பாளையம் தேவாநகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்த 75 வயது மூதாட்டி ஏற்கனவே நீரிழிவு நோய் மற்றும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கடந்த 5-ந் தேதி கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சாவு 75 ஆனது

முத்தியால்பேட்டை சோலை நகர் கல்லைறை வீதியை சேர்ந்த 65 வயது மூதாட்டி தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த 5-ந் தேதி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருங்கப்பாக்கம் துலுக்கானத்தம்மன் நகரை சேர்ந்த 85 வயது முதியவர் திடீரென உயிரிழந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அபிஷேகப்பாக்கம் நேருவீதியை சேர்ந்த 72 வயது முதியவர் ஏற்கனவே மூளை பாதிப்பு, உயர்ரத்த அழுத்தம், நீரிழிவுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தொற்றுக்காக கடந்த 24-ம் தேதி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்