வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை - கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது

விழுப்புரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை, கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது.

Update: 2020-08-07 07:13 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி, பேசுகையில், மழைக்காலங்களில் தீயணைப்பு துறையினர், ரப்பர் படகுகள் உள்ளிட்ட மீட்பு படகுகளை சரிபார்த்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பொதுப்பணித்துறையினர், புயல் பாதுகாப்பு இல்லங்கள், பள்ளி கட்டிடங்கள், சமுதாய கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலை புறம்போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நீர்நிலைகளில் உடைப்பை தடுப்பதற்காக மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையினர், சாலைகளில் மரங்கள் விழுதல், மின் கம்பிகள் அறுந்து விழுதல், மின் கம்பங்கள் சாய்தல் போன்றவற்றை உடனுக்குடன் சரிசெய்து சீரான போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். அதனை தொடர்ந்து தீயணைப்புத்துறையின் சார்பில் நடைபெற்ற பேரிடர் கால மீட்பு பணிகளில் ஈடுபடுவது குறித்த செயல்முறை விளக்க ஒத்திகை நிகழ்ச்சியை கலெக்டர் பார்வையிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) சரஸ்வதி, திண்டிவனம் சப்-கலெக்டர் அனு, மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்