மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பலத்த மழை: நொய்யல் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஒடுகிறது.

Update: 2020-08-07 06:33 GMT
கோவை,

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று உள்ளதால், கோவை மாவட்டம் பகுதியில் உள்ள கோவை குற்றாலம், வால்பாறை, பொள்ளாச்சி, கணுவாய், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் நீலகிரி மாவட்டம் மற்றும் கேரள பகுதிகளலும் கனமழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் நேற்று காலை முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தொடர்ந்து மேலும் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிகவும் அதிக அளவில் சூறாவளி காற்றுடன் மழை பெய்யும் மலைப் பிரதேசங்களில் வசிக்கின்ற பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பில்லூர் அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் வருகிறது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றபட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பவானி ஆற்றின் கரையோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

இதேபோல் கோவைக்கு முக்கிய நீராதரமாக விளங்கும் சிறுவாணி அணை மற்றும் அதன் நீர் பிடிப்பு பகுதிகளில் ஒரே நாளில் நேற்று காலை வரை 180 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதனால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 30 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கோவை குற்றால அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அதேபோல் சாடிவயல் பாலம், மாதம்பட்டி பாலம் போன்றவற்றில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து சென்று கொண்டிருக்கிறது. இதேபோல் பூலுவப்பட்டி அருகேயுள்ள சித்தரைசாவடி அணைகட்டு நிரம்பி பலத்த சத்ததுடன் நீர் நொய்யாலாற்றில் சென்று கொண்டிருப்பதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பேரூராட்சி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.தீயணைப்புத்துறையினர் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆராய்ந்து அவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில் துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தொடர்ந்து 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் விழிப்புடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வால்பாறை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வாழைத்தோட்டம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோரத்தில் உள்ள வீடுகள் மற்றும் அரசு பஸ் போக்குவரத்துக்கழக டெப்போவுக்குள் தண்ணீர் புகுந்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். அவர்களை அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள முகாமிற்கு வருமாறு அறிவிப்பு செய்யப்பட்டது.

கோவையில் பெய்து வரும் கனமழையால் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது, இந்நிலையில் வெள்ளலூர் சிங்காநல்லூர் இடையேயான தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் போக்குவரத்து துண்டியக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து மாற்றப்பட்டு சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பாலம் நீரில் அடித்துச் செல்லாமல் இருக்க மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்