மதுரை பெண் வக்கீல் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை: ஆவணங்களை கைப்பற்றினர்

இலங்கை தாதா அங்கொடா லொக்கா மரணம் தொடர்பாக மதுரையில் பெண் வக்கீல் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்திஆவணங்களை கைப்பற்றினர்.

Update: 2020-08-07 05:03 GMT
மதுரை,

இலங்கையின் நிழல் உலக தாதா அங்கொடா லொக்கா. இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. இவர் தமிழகத்தில் பதுங்கி தனது குடியுரிமையை மறைத்து மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிரதீப்சிங் என்ற பெயரில் மதுரையில் வசிப்பதாக போலி ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தயாரித்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம் கோவையில் மர்மமாக இறந்த அவரது உடலை மதுரை கொண்டு வந்து இங்குள்ள மின் மயானத்தில் தகனம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் அங்கொடா லொக்கா எப்படி இறந்தார், கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து இலங்கையில் புகார் எழுந்தது. உடனே இலங்கை அரசு இது குறித்து விசாரிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் மதுரையை சேர்ந்த வக்கீல் சிவகாமி சுந்தரி, ஈரோட்டை சேர்ந்த தியானேஸ்வரன் மற்றும் அங்கொடா லொக்காவுடன் இருந்த அம்மானிதான்ஷி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்ததாக தெரிய வருகிறது. இதற்கிடையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு ஐ.ஜி. சங்கர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது விசாரணை நடந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாகசி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு பரமசாமி தலைமையில் சுமார் 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று மதுரை வந்தனர். அவர்கள் கூடல்நகர் ரெயில்நகர் பகுதியில் வக்கீல் சிவகாமி சுந்தரி தங்கியிருந்த வீட்டிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவருக்கும், அங்கொடா லொக்காவுக்கும் உள்ள தொடர்பு குறித்து வீட்டில் சோதனை செய்தனர். அங்கு சிவகாமி சுந்தரி உள்ளிட்ட 4 பேரின் பாஸ்போர்ட்டுகளை அவர்கள் கைப்பற்றினார்கள். அது தவிர இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ரூபாய் நோட்டுகள், வங்கி புத்தகம் ஆகியவற்றை கைப்பற்றினர்.

அதை நேரத்தில் மற்றொரு போலீஸ் குழுவினர் அதே பகுதியில் உள்ள சிவகாமி சுந்தரியின் அலுவலகத்திற்கும் சென்று ஆய்வு செய்தனர். அங்கு பல்வேறு ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். மேலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சிவகாமிசுந்தரி தங்கியிருந்த வீடு மற்றும் அலுவலகத்தை வாடகைக்கு விட்ட உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினர்.

எப்போது வீட்டிற்கு குடி வந்தார்கள், அவர்களின் விவரங்கள் எதுவும் உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். இது தவிர சிவகாமிசுந்தரியின் குடும்பம் பற்றியும், அவரது பெற்றோர் குறித்தும் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரித்தனர்.

இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறும் போது, “சிவகாமிசுந்தரியின் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து பாஸ்போர்ட், வங்கி புத்தகம் என 60 வகையான ஆவணங்களை கைப்பற்றி உள்ளோம். வக்கீலின் பெற்றோரை விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளோம். எனவே இன்றும்(வெள்ளிக்கிழமை) விசாரணை நடைபெறும்“ என்றனர்.

மேலும் செய்திகள்