தர்மபுரி மாவட்டத்தில் துணை கலெக்டர் உள்பட 4 பேருக்கு கொரோனா
தர்மபுரி மாவட்டத்தில் துணை கலெக்டர் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி,
தர்மபுரியில் பணி நியமனம் செய்யப்பட்ட 28 வயது பெண் துணை கலெக்டர் சென்னையில் இருந்து தர்மபுரிக்கு வந்தார். அவரை சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
நல்லம்பள்ளி அருகே உள்ள ஏலகிரியான் கொட்டாய் பகுதியை சேர்ந்த 27 வயது வாலிபர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தட்டச்சராக பணிக்கு சென்று வந்தார். இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 24 வயது வாலிபர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவருக்கு கொரோனா உறுதியானது.
பென்னாகரத்தில் செல்போன் கடை நடத்தி வரும் 30 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 4 பேரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு உள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 813 ஆக உயர்ந்து உள்ளது.