தமிழகத்தில் நக்சலைட்டுகள் இல்லை: சாத்தான்குளம் சம்பவம் போலீசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி விட்டது - முன்னாள் டி.ஜி.பி.தேவாரம்

தமிழகத்தில் நக்சலைட்டுகள் இல்லை என்றும், சாத்தான்குளம் சம்பவம் போலீசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி விட்டது என்றும் முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. தேவாரம் பேசினார்.

Update: 2020-08-07 00:26 GMT
திருப்பத்தூர்,

1980-ம் ஆண்டு திருப்பத்தூர், ஜோலார்பேட்டை பகுதிகளில் நடந்த நக்சலைட்டுகள் வேட்டையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது நடந்த தாக்குதலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, ஏட்டு ஆதிகேசவலு, போலீஸ்காரர்கள் முருகேசன், ஏசுதாஸ் ஆகிய 4 பேர் நக்சலைட்டுகளால் நாட்டு வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டனர். அவர்களின் நினைவாக திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் நினைவு தூண் ஒன்று நிறுவப்பட்டது. அந்த நினைவு தூணை மண்டபம் போல் புதிதாக கட்டி திருப்பத்தூர் போலீசார் புதுப்பித்தனர்.

தாக்குதலில் உயிரிழந்த தினமான ஆகஸ்டு 6-ந் தேதியை வீர வணக்க நாளாக திருப்பத்தூர், ஜோலார்பேட்டை போலீசார் மற்றும் பொதுமக்கள் அனுசரித்து வருகின்றனர். அதன்படி நேற்று திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் உள்ள நினைவு தூண் முன்பு 40-வது ஆண்டு வீர வணக்க அனுசரிப்பு நடந்தது.

அதில் ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. தேவாரம் காணொலி காட்சி மூலம் பேசினார். நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, கலெக்டர் சிவன்அருள், டி.ஐ.ஜி. காமினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் பங்கேற்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த நினைவு தூணில் மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செய்து, அஞ்சலி செலுத்தினர். அப்போது வானத்தை நோக்கி 21 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டு சோக கீதம் இசைக்கப்பட்டது.

இதையடுத்து காணொலி காட்சி மூலம் முன்னாள் டி.ஜி.பி. தேவாரம் பேசியதாவது:-

40 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் தொடங்கப்பட்ட நினைவு நாள் தற்போதும் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் பொதுமக்கள் தான். பொதுமக்களின் ஒத்துழைப்பால் தான் நக்சலைட்டுகளை ஒழிக்க முடிந்தது. காவல் துறையைச் சேர்ந்தவர்களும் இதற்கு உறுதுணையாக இருந்தனர். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலேயும் இதுபோல தனியாக நினைவஞ்சலி செலுத்துவது இல்லை. தமிழகத்தில் தற்போது நக்சலைட்டுகள் இல்லை. சாத்தான்குளம் சம்பவம் போலீசுக்கு மிகவும் அவப்பெயரை ஏற்படுத்தி விட்டது. இது மிகவும் துயரமான சம்பவம். தமிழக போலீசார் உலக அளவில் பிரசித்தி பெற்றவர்கள். தற்போது கொரோனா தொற்றால் போலீசாருக்கு பல்வேறு சுமைகள் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து தங்களை காத்துக் கொண்டு பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் கியூ பிரிவு போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், போலீஸ் சூப்பிரண்டுகள் மயில்வாகனன் (ராணிப்பேட்டை), எஸ்.அரவிந்த் (திருவண்ணாமலை), ஓய்வுபெற்ற போலீஸ் சூப்பிரண்டு எம்.அசோக்குமார், திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலு, அ.தி.மு.க. நகர செயலாளர் டி.டி.குமார், முன்னாள் எம்.எல்.ஏ., கே.ஜி.ரமேஷ் மற்றும் போலீஸ் அதிகாரிகள், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள், பல்வேறு துறை அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மலர் வளையம், மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும் செய்திகள்