தமிழகத்தில் இ-பாஸ் வழங்கும் முறையை எளிதாக்க கூடுதல் குழுக்கள் - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
‘தமிழகத்தில் இ-பாஸ் வழங்கும் முறையை எளிதாக்கும் வகையில் மாவட்டங்கள் தோறும் கூடுதல் குழுக்கள் அமைக்கப்படும்‘ என்று திண்டுக்கல்லில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆய்வு செய்தார். இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மேலும் பல்வேறு துறைகள் சார்பில் நடந்து முடிந்த ரூ.8 கோடியே 88 லட்சம் மதிப்பிலான 18 திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.3 கோடியே 69 லட்சம் மதிப்பிலான 42 திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து தொழில் கூட்டமைப்பினர், விவசாயிகள், மகளிர் சுயஉதவிக்குழுவினரையும் சந்தித்து பேசினார். அதன்பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் 5-ந்தேதி வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 73 ஆயிரத்து 460 ஆகும். அதில், குணமடைந்தவர்கள் 2 லட்சத்து 14 ஆயிரத்து 815 பேர். இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 461. மாநிலம் முழுவதும் இதுவரை 28 லட்சத்து 45 ஆயிரத்து 406 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது.
60 அரசு மையங்களும், 65 தனியார் மையங்கள் என மொத்தம் 125 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதேபோல் மருத்துவர்களும் தேவையான அளவு இருக்கின்றனர். எனவே, கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டு உடனுக்குடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கொரோனா காலத்தில் மக்களின் சிரமத்தை போக்குவதற்கு விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டன. மத்திய அரசு கூடுதலாக ஒதுக்கிய அரிசியும் வழங்கப்படுகிறது. அந்த அரிசி, நவம்பர் மாதம் வரை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களின் விவரம் வருமாறு:-
கேள்வி:- புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதுபற்றிய தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?
பதில்:- அதுபற்றி ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டேன். அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் கனவை நனவாக்கும் வகையில் தொடர்ந்து செயல்படுகிறோம்.
கேள்வி:- ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க.செல்வம் தி.மு.க. குடும்ப கட்சி என கூறியிருக்கிறாரே?
பதில்:- அது, அவர்களின் உட்கட்சி பிரச்சினை.
கேள்வி:- நயினார் நாகேந்திரன் அதிருப்தியில் இருக்கிறார். மீண்டும் அவர் அ.தி.மு.க.வுக்கு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?
பதில்:- அ.தி.மு.க.வில் இருந்து தான் அவர், பா.ஜனதா சென்றார். அ.தி.மு.க.வுக்கு மீண்டும் வந்தால் சேர்த்து கொள்வோம்.
கேள்வி:- எஸ்.வி.சேகர் முதல்-அமைச்சருக்கு இந்தி தெரியும் என்று கூறியிருக்கிறார்?
பதில்:- எனக்கு இந்தி தெரியும் என்று அவருக்கு எப்படி தெரியும். அவர், எந்த கட்சியை சேர்ந்தவர். பா.ஜனதாவில் இருந்தார் என்றால் அவர் பிரசாரத்துக்கு வரவில்லை. அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏதாவது பேசுவார், வழக்கு என்றால் ஒளிந்து கொள்வார்.
கேள்வி:- கொரோனா காலத்தில் ராமர் கோவில் கட்டுவது தவறானது என்று சமூக வலைத்தளங்களில் கருத்து பரவுகிறது. அது பற்றி உங்களது கருத்து என்ன?
பதில்:- ராமர் கோவில் பிரச்சினை நீண்டகாலமாக இருக்கிறது. அது இன்று நேற்றைய பிரச்சினை அல்ல. நீதிமன்ற உத்தரவுப்படி செயல்படுகிறார்கள்.
கேள்வி:- இ-பாஸ் பெறுவதில் மக்களுக்கு சிரமம் உள்ளது. அது எளிமையாக்கப்படுமா?
பதில்:- தமிழகம் முழுவதும் இ-பாஸ் வழங்கும் முறை எளிதாக்கப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் இ-பாஸ் வழங்குவதற்கு ஒரு குழு மட்டுமே இருந்தது. தற்போது கூடுதலாக மற்றொரு குழு நியமிக்கப்படுகிறது. அத்தியாவசிய தேவைக்கு, உண்மையான காரணத்தை தெரிவித்து இ-பாஸ் பெற்று கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆய்வு கூட்டத்தை முடித்துவிட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரைக்கு சென்றார். அங்கு ரூ.304 கோடியில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு, வடபழஞ்சியில் 900 படுக்கைகளுடன் உருவாக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மருத்துவமனையையும் அவர் திறந்து வைத்தார்.
அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு, கொரோனா தடுப்பு பணிகள், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இனி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார்.