தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைய தயாராக இருக்கிறார்கள் - மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் பேட்டி

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைய தயாராக இருக்கிறார்கள் என பா.ஜனதா மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் கூறினார்.

Update: 2020-08-06 23:41 GMT
வேதாரண்யம், 

நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சியில் 21 வார்டுகளிலும் பா.ஜனதா கட்சி கொடியேற்று நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கட்சியின் மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

இதில் மாவட்ட தலைவர் நேதாஜி, கல்வியாளர் பிரிவு செயலாளர் கார்த்திகேயன், பொதுச்செயலாளர் ராஜேந்திரகுமார்், மகளிர் அணி நிர்வாகி ஜீவஜோதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை தொடர்ந்து கருப்பு முருகானந்தம் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு அறிவித்துள்ள மும்மொழி கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும். அரசு பள்ளிகளில் இருமொழி கொள்கையை வைத்து விட்டு தனியார் பள்ளிகளில் மட்டும் மும்மொழி கொள்கையை பின்பற்றினால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே மும்மொழி கல்வி கொள்கை திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

இல்லையென்றால் பா.ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும். அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கி உள்ளதால் இந்துக்களின் மனதில் இருந்த வேதனை நீங்கி உள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் எதிர்பார்த்த ராமர் கோவிலுக்கு பாரத பிரதமர் அடிக்கல் நாட்டி உள்ளார். இது பலரின் உயிர் தியாகத்துக்கு கிடைத்த வெற்றி.

பா.ஜனதா கட்சி வெளிநாடுகளில் கூட ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது. பலம் வாய்ந்த கட்சியாக திகழும் பா.ஜனதாவை யாராலும் வீழ்த்த முடியாது.

பல சலுகைகள் தருவதாக கூறி பா.ஜ.க.வினரை தி.மு.க.வில் இணைவதற்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. ஆனால் தி.மு.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைய தயாராக இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்