சுதந்திர தின விழாவில் மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் ரத்து

உப்பளத்தில் வரும் 15-ந்தேதி நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் மாணவ-மாணவிகளின் அணி வகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

Update: 2020-08-06 20:43 GMT
புதுச்சேரி,

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சுதந்திர தின விழாவை கொண்டாடுவதில் மத்திய அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி புதுவை உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் வருகிற 15-ந் தேதி சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

சுதந்திர தினவிழா கொண்டாட்டம் குறித்து சட்டமன்ற கமிட்டி அறையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். தலைமை செயலர் அஸ்வனிகுமார், வளர்ச்சி ஆணையர் அன்பரசு, போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா, செய்தித்துறை செயலாளர் சுந்தரேசன், இயக்குனர் வினயராஜ், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் பர்ன்வால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

போலீசார் அணிவகுப்பு

விழாவில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதன்படி வழக்கம்போல் முதல்-அமைச்சர் நாராயணசாமி கொடியேற்றி திறந்த ஜீப்பில் சென்று போலீஸ் அணிவகுப்பை பார்வையிடுவார். அதன்பின் விழா மேடைக்கு வந்து சுதந்திர தின உரை ஆற்றுவார். அதைத்தொடர்ந்து கொரோனா ஒழிப்பில் தீவிரமாக பணியாற்றி வரும் முன் களப்பணியாளர்கள் கவுரவிக்கப்படுவார்கள். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மட்டும் நடைபெறும்.

வழக்கமாக சுதந்திர தின விழா அணிவகுப்பில் என்.சி.சி., என்.எஸ்.எஸ்., அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் இடம்பெறுவார்கள். ஆனால் இந்த முறை அவர் களின் அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சுதந்திர தினவிழாவில் முன்பெல்லாம் சுமார் 3 ஆயிரம் பேர் வரை பங்கேற்பார்கள். இந்த முறை ஆயிரம் பேரை மட்டுமே அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து விழாவை நடத்த ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்