வீட்டில் தூக்கில் தொங்கியபடி கிடந்தார் டி.வி. நடிகர் சமீர் சர்மா பிணமாக மீட்பு

டி.வி. நடிகர் சமீர் சர்மா வீட்டு சமையல் அறையில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார்.

Update: 2020-08-06 20:10 GMT
மும்பை,

மும்பை மலாடு மேற்கு சின்சோலி பந்தர் பகுதியில் வசித்து வந்தவர் டி.வி. நடிகர் சமீர் சர்மா(வயது44). இவர் ‘லெப்ட் ரைட் லெப்ட்', 'உன்கி சாஸ் பி கபி பாகு தி' உள்ளிட்ட தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்து உள்ளார். இதில் கடந்த சில நாட்களாக அவரது வீடு பூட்டியே கிடந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு டி.வி. நடிகர் வீட்டின் சமையல் அறையில் தூக்கில் தொங்கியபடி கிடப்பதை கட்டிட காவலாளி ஜன்னல் வழியாக பார்த்தார். அவர் உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தொிவித்தார்.

தற்கொலை?

விரைந்து சென்ற போலீசார் தூக்கில் பிணமாக தொங்கிய டி.வி. நடிகரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மலாடு போலீஸ் நிலைய சீனியர் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் பெர்னான்டஸ் கூறுகையில், ‘‘சம்பவ இடத்தில் இருந்து கடிதம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இது தற்கொலை சம்பவம் போல தெரிகிறது. அவர் 2 நாட்களுக்கு முன்பே தூக்குப்போட்டு இருக்கலாம். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம்’’ என்றார்.

போலீசார் இந்த சம்பவம் குறித்து விபத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உருக்கமான கவிதை

இந்தநிலையில் சமீர் சர்மா கடந்த மாதம் 27-ந் தேதி சமூகவலைதளத்தில் கனவு மற்றும் மரணம் தொடர்பான கவிதை ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

எனக்கான சிதையை அமைத்து அதில் படுத்துவிட்டேன். எனது நெருப்பால் அது பற்றவைக்கப்பட்டுள்ளது. நானே அதில் எரிந்தேன். எனது கனவில் இருந்து எழ அதை கொன்றேன். தற்போது எனது கனவு கலைந்துவிட்டது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உயிரிழந்த டி.வி. நடிகரின் மறைவுக்கு நடிகர்கள் சித்தார்த் மல்கோத்ரா, வருண் தவான் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே நடிகர் சுஷாந்த் சிங், அவரது முன்னாள் மேலாளர் திஷா சாலியன் மரணம் பரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் டி.வி. நடிகரின் உயிரிழப்பு திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்